இந்து மரபில் அதன் ஒவ்வொரு சடங்குகளுக்கும் ஆழமான அர்த்தங்கள் உண்டு. ஆரத்தி காட்டுதல் தொடங்கி, பூஜை, அர்ச்சனை, புஷ்பார்ப்பணம் என நீளும் பட்டியலில், சுவாரஸ்யமான ஒரு சடங்கு உண்டு. கோவிலில் மணி அடிப்பது. பூஜைகள் நடக்கிற போது எதற்காக மணியை ஒலிக்க செய்ய வேண்டும்? இவ்வாறு செய்வது ஆன்மீக ரீதியாக, அறிவியல் ரீதியாக நமக்கு எதை உணர்த்துகிறது.
ஆன்மீக பெரியோர்களின் கூற்றுபடி, கோவிலில் மணியை ஒலிக்க செய்வதால், ஒருவரின் உடல், மனம் மற்றும் ஆன்மா அமைதியடைகிறது என்கின்றனர். கோவிலில் ஒலிக்கும் இந்த மணியை சமஸ்கிருதத்தில் கண்டா அல்லது கண்டி என்று அழைக்கின்றனர். இந்து வழிபாட்டு முறையில் இந்த ஆலய மணிக்கு மிக முக்கியமான இடமுண்டு. இது கடவுளின் இருப்பை தூண்டும் விதமாக அமைகிறது. நீங்கள் உற்று கவனித்தால் ஆலய மணியை ஒலிக்க செய்யும் போது, ஆவும் ( ஓம்) எனும் சப்தம் கேட்பதை உணர முடியும்.
இந்த ஒலி அந்த இடத்தை சுற்றிலும் ஓர் பேரதிர்வை ஏற்படுத்துகின்றது. இந்த பேரதிர்வு என்பது நேர்மறை ஆற்றலை கொடுக்க கூடியதாக இருப்பது இதன் தனிச்சிறப்புகளுள் ஒன்று. தெய்வத்திற்கு நிகழும் அபிஷேகம் தொடங்கி, ஆரத்தி மற்றும் அர்ப்பணம் வரை இந்த ஒலியை நாம் தொடர்ந்து கேட்கிறோம்.
ஆன்மீக ரீதியாக பார்த்தால், கடவுள்கள் அனைவரும் இசை கருவிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது ஐதீகம். எனவே இதனை ஒலிக்க செய்வதால் அவ்விடத்தின் தெய்வீகத் தன்மை கூடுகிறது. வெளிப்புறமாக இந்த ஒலி கேட்கும் போதும் மற்ற தேவையற்ற புற சப்தங்களில் இருந்து மனம் விலகியிருக்கிறது. மேலும் வெளியே இருந்து வேறெந்த சப்தமும் நம் மனதை நெருங்காத போது, நாம் உள்நிலையில் ஆழமான நிலையை அடைய முடிகிறது. தெய்வத்திற்கு ஒலிக்கும் இந்த மணியில் பல வடிவங்கள், அளவுகள் உண்டு. உதாரணமாக, கணபதி மணி, கருட மணி, நந்தி மணி மற்றும் பஜனைகளில் பயன்படுத்தும் மணி என பல வகை உண்டு.
மணியின் வெளிப்புற தோற்றம் அனந்தா எனும் எல்லையற்ற தன்மையை குறிக்கிறது. அதனுள் இருக்கும் அதன் நாக்கு பகுதி அன்னை சரஸ்வதி தேவியை குறிக்கிறது. அதன் கைப்பிடி பிராண சக்தியை குறிக்கிறது.
ஸ்கந்த புராணத்தின் படி, ஒருவர் ஆலய மணியை பக்தியுடன் ஒலிக்க செய்ய, அவரின் பாவங்கள் கறையும் என்பது நம்பிக்கை.
Image : Dreamstime