பொங்கல் அன்று வீட்டின் வாயிலில் கோலமிடுவது வழக்கமாக உள்ளது - ஏன்?

பொங்கல் அன்று வீட்டின் வாயிலில் கோலமிடுவது வழக்கமாக உள்ளது - ஏன்?

Update: 2021-01-17 05:30 GMT

பொங்கல் பண்டிகையின் போது அதிகாலையில் பொங்கல் வைத்தல் எத்தனை முக்கியமானதோ அதே அளவு முக்கியத்துவத்துடன் சமீபத்தில் கோலமிடுதலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கோலமிடுதல் ஒரு கலை.

ஆனால் இது வெறும் கலை மட்டுமல்ல. இது ஒரு ஆன்மீக குறியீடு. கலாச்சார அடையாளம். பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு வெளி. இது போன்ற பல பரிமாணங்கள் இருப்பதால் தான் கோலமிடுதல் என்பது அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது.

கோலம் என்பது ஒரு உருவம், அல்லது வடிவம் என ஏதேனும் ஒன்றை வாயிலின் முற்றத்தில் வரைவதாகும். வண்ணமயமான பொடி அல்லது வெள்ளை நிற பொடி கொண்டு வீடுகள், அலுவலகங்கள் அதாவது ஒரு வாயில் படியின் முன்பு கோலம் இடுவது வழக்கம். பெரும்பாலும் அதிகாலையிலும், மாலை வேலையிலும் கோலம் இடுவது அந்த சுற்று சுழலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

மேலும் கோலம் என்பது மங்களகரமான அம்சம். இது வீட்டினுள் இலட்சுமியை வரவேற்க இடப்படுவதாகவே ஐதீகம். இதில் பல வகை உண்டு, புள்ளி வைத்து நெளிவு கோலமிடுவது, தீபம், தெய்வம் மற்றும் பட்டாம்பூச்சி மயில் போன்ற அழகியல் சார்ந்த வடிவங்களை வரைவது, மற்றும் பூக்கோலம் இடுவதை ரங்கோலி போன்ற பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

இந்த கோலமிடும் வைபவம், பொங்கல் அன்று மட்டுமில்லாமல், கேரளாவில் ஓணத்தின் போதும், சகல விதமான சுப நிகழ்ச்சிகளின் போதும் கோலமிடுகிறார்கள். இதன் ஆன்மீக தார்பரியம் என்னவெனில், வாயில் படியில் புள்ளிகள் இட்டு வளைவு நெளிவுடன் கோலமிடும் போடு,, தீய சக்திகள் வீட்டினுள் நுழைய முற்படும் எனில், இந்த கோலத்தை கண்டு அஞ்சும்.

பெரும்பாலான கோலங்கள் நட்சத்திர வடிவினை மையப்படுத்தி உருவாக்கப்படுவதும் இதனால் தான். மேலும் ஒரு பூஜைக்காக சிறு கலசம் வைக்க வேண்டும் என்றால் கூட பெரிய வடிவங்கள் ஏதும் இல்லாவடினும், மூன்று புள்ளி வைத்து கோலமிடுவார்கள்.  

இது வெறும் சடங்கு, பாரம்பரியம் என்பதை தாண்டி இதற்கென சில அறிவியல் காரணம் உண்டு.  வண்ணமயமான வடிவத்தை ஒருவர் வீட்டின் முன் பார்க்கிற போது, அவருடைய மனம் ஆனந்தம் கொள்ளும். மேலும் இந்த ரம்மியமான வடிவமும் காட்சியும் வீட்டிற்கு போதுமான நல்ல அதிர்வுகளை ஈர்த்து வழங்கும்.

மேலும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் எந்த மனநிலையில் வந்தாலும், வாசலில் இந்த காட்சியை காண்கிற போது அவர்களின் எண்ணமும் செயலும் நல்ல விதமாகவே மாறும் என்பது நம்பிக்கை. மேலும் புள்ளிகளை இணைத்து கோலமிடுவது மூளைக்கான சிறந்த பயிற்சியாகவும் பார்க்கப்பட்டது.

இயற்கைக்கு நன்றி சொல்லும் வேளையில், ஏன் கோலம் என்கிற கேள்விக்கு விடை என்னவெனில், முந்தைய காலங்களில் கோலம் என்பது அரிசி மாவில் இடப்பட்டு வந்தது. காரணம் அவை பூச்சிகள், எறும்புகளுக்கு உணவாக அமையும் என்பதால்.

காலம் மாற்றத்தால் அரிசி மாவு, கோலப்பொடியாகாவும், இன்றைய நவீன காலத்தில் சில வீடுகளின் முன் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களாக கூட காண முடிகிறது. நம் மரபை ஒருபோதும் விடாத தன்மையே நமக்கு நலம் பயக்கும். பொங்கல் அன்று வீடு விழாக்கோலம் பூணுவதன் அடையாளம் வாயிலில் இடும் வண்ணம் கோலம் என்றால் அது மிகையல்ல.

Similar News