மாங்கல்ய பலம் தரும் சாவித்திரி விரதம் என்று அழைக்கப்படும் காரடையான் நோன்பு!

பெண்கள் தங்களின் கணவனின் தீர்க்காயுளுக்காக மேற்கொள்ளும் விரதம் ஏராளமாக உள்ளன . மாங்கல்ய பலம் வேண்டி எடுக்கப்படும் விரதங்களில் ஒன்றுதான் இந்த காரடையான் நோன்பு

Update: 2023-03-14 17:45 GMT

பெண்களின் மாங்கல்ய பலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட காரடையான் நோன்பு என்று அழைக்கப்படும் இந்த விரதத்தை 'சாவித்ரி விரதம்' என்றும் 'காமாட்சி விரதம்' என்றும் அழைப்பார்கள். இந்த விரதத்தின் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் புராணத்தில் சொல்லப்பட்டுள்ள சத்தியவான்- சாவித்திரி கதையை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது .

அஸ்வபதி என்ற மன்னனின் மகள் தான் சாவித்திரி. அவள் அவ்வப்போது காட்டிற்குச் சென்று இயற்கை சூழலை ரசிப்பதையும் வனவிலங்குகளை வேட்டையாடுவதையும் வழக்கமாக வைத்திருந்தாள். அப்படி ஒரு முறை காட்டிற்குச் சென்றபோது அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்து காதல் வயப்பட்டாள். நாட்டிற்கு திரும்பியதும் தன்னுடைய காதலை பற்றி தந்தையிடம் தெரிவித்தாள் .தன் மகள் காதலிக்கும் அந்த இளைஞனை பற்றி விசாரித்தார் மன்னர் அஸ்வபதி. அப்போது நாரதரின் மூலமாக காட்டில் உள்ள இளைஞனின் பெயர் சத்யவான் என்பதும் அவன் ஒரு அரசகுமாரன் என்பதும் அவனுக்கு குறைந்த ஆயுள்தான் உள்ளது என்பதும் மன்னருக்கு தெரிய வந்தது. 

சத்தியவான் பற்றிய ரகசியம் அறிந்த மன்னர் அவனுக்கு தன் மகளை மணமுடித்து கொடுக்க தயங்கினார். ஆனால் சாவித்ரி தன்னுடைய காதலில் உறுதியாக இருந்தாள்.மகளின் மன உறுதியால் மன்னர் மனம்பதறினார். ஆனால் வேறு வழியில்லை. அன்பாக வளர்த்த மகளுக்கு முன்பாக தன்னுடைய பிடிவாதத்தை தளர்த்தி சத்யாவனுக்கே சாவித்திரியை திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணத்திற்கு பிறகு காட்டில் சத்யவானுடன் வாழ்ந்து வந்தாள் சாவித்திரி. சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில் சாவித்திரியின் மடியில் படித்திருந்த நிலையிலே சத்தியவான் உயிர் பிரிந்தது. அன்றைய தினம் 'காரடையான் 'நோன்பாகும். யார் கண்ணுக்கும் தென்படாத வகையில் அரூபமாக வந்து எமதர்மன் சத்தியவானின் உயிரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் காரடையான் நோன்பை முறைப்படி செய்து வந்த சாவித்திரியின் கண்களில் இருந்து ஏமாதர்மன் தப்ப முடியவில்லை .

அது எமதர்மனுக்கு தெரிந்தாலும் கூட அதை வெளி காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து அகல முற்பட்டார் . எமதர்மன் செல்ல செல்ல அவரை பின்தொடர்ந்து சென்றாள் சாவித்திரி. இவள் எதற்காக நம்மை பின் தொடர்ந்து வருகிறாள் என்று நினைத்தார்.அதை அவளிடமே கேட்டு தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தார் . "ஏ பெண்ணே! உனக்கு என்ன வேண்டும் ?எதற்காக என்னை பின்தொடர்ந்து வருகிறாய்?" என்று கேட்டார் சாவித்திரி.

அதற்கு சாவித்திரி எந்த பதிலும் தரவில்லை. எமதர்மனே தொடர்ந்தார். "உன்னுடைய கணவனுக்காகத்தான் நீ என்னை பின்தொடர்கிறாய் என்றால் அதில் உனக்கு என்னால் எந்த நன்மைகளையும் செய்ய முடியாது. அவனது உயிர் திரும்புவது முடியாத காரியம். எனவே வேறு ஏதாவது வரம் என்னிடம் உனக்கு வேண்டுமானால் கேள் .நிச்சயமாக தருகிறேன்" என்றார்.

எமதர்மன் அப்படி கேட்டதும் சாவித்திரி சாதுரியமாக செயல்பட்டு ஒரு வரத்தை கேட்டாள். அதாவது "எனக்கு பிறக்கின்ற நூறு குழந்தைகளை தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு என் மாமனார் கொஞ்ச வேண்டும் "என்று கேட்டாள் சாவித்திரி .அப்படி கேட்டதும் யோசிக்காமல் எமதர்மன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் .ஆனால் அவரை மீண்டும் சாவித்திரி தடுத்து நிறுத்தினாள். 'எதற்காக தடுத்தாய்?' என்பது போல் பார்த்த எமதர்மனிடம் சரி நீங்கள் கொடுத்த வரத்தின் படி என்னுடைய கணவரின் உயிரை திருப்பித் தாருங்கள் என்று கேட்டார்.

அப்போதுதான் அவருக்கு எப்படி ப்பட்ட ஒரு வரத்தை கொடுத்திருக்கிறோம் என்பது தெரியவந்தது கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால் சத்யாவான் உயிரை திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றார் எமதர்மன். சத்தியவானின் உயிரை சாவித்திரி மீண்டும் பெறுவதற்கு அவளுக்கு பெரும் உதவியாக இருந்தது. அவள் முறையாக கடைபிடித்து வந்த காரடையான் நோன்பு தான். அதனால்தான் இந்த விரதம் 'சாவித்திரி விரதம்' என்று பெயர் பெற்றது. இது காமாட்சி அம்மன் கடை பிடித்த விரதம் என்பதால் இந்த விரதத்திற்கு 'காமாட்சி விரதம்' என்ற பெயரும் வந்ததாக சொல்லப்படுகிறது.

Similar News