மயிலாடுதுறை மாவட்டம் நாகப்பட்டிணத்தில் அமைந்துள்ளது கொருக்கை. அப்பகுதியில் அமைந்திருக்கும் வீரட்டேஸ்வரர் ஆலயம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். இங்கு குடி கொண்டிருக்கும் அம்பிகைக்கு ஞானாம்பிகை என்று பெயர். மேலும் இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.
இங்குள்ள விநாயக பெருமானுக்கு குறுங்கை கணபதி என்பது திருப்பெயராகும். இங்கு சிவபெருமான் அரிய தரிசனத்தை பக்தர்களுக்கு நல்குகிறார். இங்கிருக்கும் சிவபெருமானுக்கு காம தகன மூர்த்தி என்ற பெயரும் உண்டு. காரணம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றான இக்கோவிலில் காமனை சிவபெருமான் எரித்தார் என்கிறது புராணம். அதன் படி காம தகன மூர்த்தியாக அருள் பாலிக்கும் சிவபெருமான், இடக்காலை மடித்து வலக்காலை தொங்க செய்து, வலக்கையில் அபய முத்திரையை ஏந்தி, இடக்கையை மடக்கி தன் கால் மீது வைத்த கோலத்தில் தரிசனம் தருகிறார்.
மத்ஸிய புராணத்தின் படி இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணம் யாதெனில், தாரகாசுரன் எனும் அரக்கனின் பிடியால் மொத்த தேவலோகமும் துன்புற்று இருந்தது. இத்துன்பத்திலிருந்து நம்மை மீட்கக் கூடியவர் சிவபெருமான் தான். ஆனால் அவரோ கடும் தவத்திலிருக்கிறார் அவரை எழுப்புவது எப்படி என்ற கேள்வி வரும் போது. அனைவரும் மன்மதனின் உதவியை நாடினர். மன்மதனும் வரவிருக்கும் விளைவு தெரியாமல் தன் வில்லால் சிவபெருமானை தாக்கிய போது, அவருடைய வில் அனைத்தும் மலர் மாலையாக மாறியது. தவம் களைந்த சிவபெருமான் தன் நெற்றிகண்ணால் மன்மதனை பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். அப்போது அவனுடைய மனைவி ரதி அவனை மீட்க கோரி சிவனை வேண்ட, மன்மதனை மீட்டுக்கொடுத்தார் சிவபெருமான்.
இக்கோவிலில் மன்மதனும், ரதியும் உற்சவ மூர்த்திகளாக அருள் பாலிக்கின்றனர். அன்பு, பாசம், உணர்வு சார்ந்த பிரச்சனையில் தவிப்பவர்கள் இங்கு வந்து இறைவனை வணங்கினால் உறவு சிக்கல்கள் தீரும் என்பது நம்பிக்கை. நம்முடைய மரபில் எட்டு அரக்கர்களை அதாவது அந்தகாசுரன், கஜாசுரன், ஜலந்தாசுரன், திருப்புரதி, காமன், அர்ஜுனன், தக்ஷன் மற்றும் தாரகாசுரன் ஆகிய எட்டு அரக்கர்களை சிவபெருமான் வதைத்ததை அஷ்ட வீரட்டானமெ என்கின்றனர். இந்த எட்டு வெற்றிகளை குறிக்கும் கோவில்கள் அஷ்ட வீரட்டானேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி காமனை எரித்த இடம் இது. மேலும் பெருமாளின் புத்திர சோகத்தை தீர்த்த தலம் இது என்பதால், இக்கோவிலில் புத்திர காமஷ்டி யாகம் நடத்தப்படுவது வழக்கம். மேலும், இங்குள்ள ஆவுடையாரில் தாமரை மலர் இருக்கும் காட்சி அரிதிலும் அரிதாக கருதப்படுகிறது.