இடர்களை களையும் இடம் குன்றம் நரசிம்மர் ஆலயம்
நாளை என்பது நரசிம்மர் இடத்தில் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. நரசிம்மர் இடத்தில் நம்பிக்கையோடு கோரிக்கைகளை சமர்ப்பித்தால் அவர் உடனுக்குடன் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம்.
தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஒரு சிற்றூர் இருந்தது. தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இணைந்த பகுதியானது முற்காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் இளைஞன் ஒருவன் ஆடு மாடுகளை மேய்த்து வந்தான். அவ்வப்போது மரத்தடியில் அமர்ந்து தியானிப்பது அவருடைய வழக்கமாக இருந்தது. ஒரு சமயம் அந்த இளைஞனுக்கு நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்று எண்ணம் எழ பெரியோர்களிடம் அதற்கான வழியை கேட்டான். அவர்கள் தவம் இயற்றினால் நரசிம்மரை தரிசிக்கலாம் என்று தெரிவித்தார்கள்.
ஒரு நாள் அந்த இளைஞன் காட்டிற்குள் ஒரு குன்றின் அருகே நடந்து சென்ற போது 'இந்த குன்றே ஹரி' இங்கே நீ தவமியற்றினால் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம் என்று அசரீரிவாக்கு எழ அந்த இளைஞன் அந்த குன்றின் மீது அமர்ந்து நரசிம்மூர்த்தியை நினைத்து தவம் இயற்றினான். ஒரு சித்ரா பௌர்ணமி தினத்தன்று நரசிம்ம மூர்த்தி அந்த இளைஞனுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த இளைஞன் நரசிம்மரிடம் தாங்கள் இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். பக்தர்களின் இடர்களை நீக்கி அருள வேண்டும் என்ற வேண்டுதலை சமர்ப்பிக்க நரசிம்மரும் அந்த மலை குன்றில் சுயம்புர்த்தியாக எழுந்தருளினார்.
நரசிம்ம மூர்த்தியை தன் தவத்தால் தரிசித்த அந்த இளைஞனே பிற்காலத்தில் இடைக்காடர் என்று அழைக்கப்பட்ட சித்தர் என கூறப்படுகிறது. இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாய் நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார். இப்பகுதி மக்கள் இத்தலத்திற்கு வந்து நரசிம்மரிடம் வேண்டி அவர்களின் இடர்கள் எல்லாம் உடனுக்குடன் நீங்கியதாக ஐதீகம் .இக்குன்று இடர் குன்று என அழைக்கப்பட்டு பின்னர் மருவி 'இடர் குன்றம்' என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது .
திருப்போரூர் செங்கல்பட்டு வழித்தடத்தில் கொட்டமேடு சந்திப்பில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இடர் குன்றம் அமைந்துள்ளது. மானாமதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் திருப்போரூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இடர் குன்றம் அமைந்துள்ளது.
SOURCE :DAILY THANTHI