திருமண தடை நீக்கும் குத்தாலம் சோழீஸ்வரர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் சௌந்தர நாயகி பரிமள சுந்தர நாயகி சமேத சோழீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விக்ரமசோழனின் மனைவி கோமலை என்பவருக்கு தீராத தோல்வியாதியை நீக்கிய இறைவன். அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்றும் சோழ மன்னன் திருப்பணி செய்து வழிபட்டதால் சோழீஸ்வரர் என்றும் பெயர் பெற்றவர். அக்னி பகவானின் பாவங்களை போக்கியவர். சித்தர்கள், முனிவர்கள் ,ஞானிகள், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் வழிபட்ட இறைவன் சோழீஸ்வரர். புராண வரலாற்றின் படி அக்னி பகவானால் தேவதச்சன் விஸ்வகர்மனை கொண்டு கர்ப கிரகம் முதலாக ஆலயத்தை அழகுபட அமைத்த இரண்டு சக்தி ஆலயங்களும் சுற்று கடவுளர்களும் நிலைபெற செய்ததாக கூறப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சோழமன்னர்களால் கருங்கற்களை கொண்டு அழகிய கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் , முன் அம்பாள் மண்டபம், மற்றும் இதர சுற்று கோவில்களும் இரண்டு பிரகாரங்களுடன் முழு அம்சங்களுடன் கீழ்த்திசை பார்த்து அமைந்த இவ்வாலயம் மிகப்பெரிய ராஜகோபுரம் அழகிய சிற்பங்களுடன் வானளாவிய ஓங்கி நின்று இறைவன் திருவடி தரிசனம் காட்டி வருகிறது. பரிமள சுகந்த நாயகி ஆலயம் உட்பிரகாரம் கிழக்கு நோக்கியும் சௌந்தரநாயகி ஆலய முகப்பு மண்டபத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.
பாதாளம் வரை வேரோடு எழுந்தருளியிருக்கும் பாதாள சனீஸ்வரர் சிறப்பு அமைவு ஆகும். பரத மகரிஷி தன் மனைவியுடன் ஆசிரமம் அமைத்து சிவனை வழிபட்டு வந்தார். புத்திரபேறு இல்லாத அவர் அம்பிகையே தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என விரும்பினார். தன் கோரிக்கை நிறைவேற சிவனை வேண்டி ஒரு யாகம் நடத்தினார். அவரது வேண்டுதலை ஏற்ற சுவாமி யாகத்தில் அம்பிகையை தோன்றச் செய்தார். மகிழ்ந்த மகரிஷி குழந்தைக்கு பரிமள சுகந்தநாயகி என பெயரிட்டு வளர்த்தார். அவள் மனப்பருவம் அடைந்தபோது சிவனிடம் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார்.