ஞானம் வழங்கும் மாணிக்க ஈஸ்வரர்!

சோழப் பேரரசன் ராஜராஜனின் தமக்கை குந்தவை நாச்சியார் தன்னுடைய சகோதரன் ஆதித்ய கரிகாலன் நினைவாக தாதாபுரம் என்ற பகுதியில் எழுப்பிய தலம் தான் மாணிக்க ஈஸ்வரர் திருக்கோவில்.

Update: 2024-06-03 15:47 GMT

இத்தலத்துக்கு ஈசன் ராஜராஜனின் பெயரான ரவிக்குல மாணிக்கம் எனும் பெயர் கொண்டு, 'ரவிக்குல மாணிக்க ஈஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அம்பிகை மாணிக்கவல்லி தாயார், காமாட்சி அம்மன் என்ற திருநாமங்களோடு அருள் பாலிக்கிறார். இக்கோவில் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது . இக்கோவிலைக் கட்டிய குந்தவை பிராட்டியார் நினைவாக அவரது சிலையும் இங்கு இடம்பெற்றுள்ளது .

இக்கோவிலை அடிப்படையாகக் கொண்டே கி.பி 1010 ஆம் ஆண்டில் தஞ்சை பெரிய கோவில் ஆன பிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதாக மாணிக்க ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோவில் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டு பழமையான கோவிலாகும். கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் காணப்படுகின்றது. மூலவராக ரவி குல மாணிக்க ஈஸ்வரரும், உற்சவரராக காமாட்சி உடனுறை மாணிக்க ஈஸ்வரரும் காட்சி தருகின்றனர்.

கோவிலின் முகப்பில் தாமரை வடிவில் பலிபீடம் , கல்மேடை மீது அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குந்தவை நாச்சியாரின் கலைநயத்திற்கு சான்றாக விளங்கும் நந்தி தேவர் இறைவனை நோக்கிய படி கம்பீரமாக அமர்ந்து காட்சி தருகின்றார். முகமண்டபம், மகா மண்டபத்தின் முன்புறமாக அமைந்துள்ளது. முகமண்டபத்தின் கூரை உட்குவிந்த நிலையில் மடிப்புகளுடன் செதுக்கப்பட்டுள்ளது போல காணப்படுகின்றது. சதுர மகாமண்டபம் நான்கு தூண்களுடனும் அதற்கு அடுத்ததாக அர்த்தமண்டபமும் உள்ளது.

ஆவுடையாரின் மீது அமைந்துள்ள சிவலிங்கமே மூலவரான மாணிக்க ஈஸ்வரர் ஆகும். இவர் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். மாணிக்க ஈஸ்வரர் ஆன சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திர கோடுகள் காணப்படுவதால் மாணிக்க ஈசனை வழிபட்டால் சகல ஞானங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இந்த தலத்தில் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பில் கலந்து கொண்டால் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி செல்லும் நெடுஞ்சாலையில் திண்டிவனத்திற்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் தாதாபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது ரவிக்குல மாணிக்க ஈஸ்வரர் திருக்கோவில்.

Tags:    

Similar News