ஐம்புலன்களை அடக்கும் ஆற்றல் தரும் மதங்கீஸ்வரர்
காஞ்சிபுரம் நகரத்திலேயே பெரிய காஞ்சிபுரம் என தற்போது அழைக்கப்படும் சிவகாஞ்சி பகுதியில் ஆறு கலைநயம் மிக்க கோவில்கள் கோவில்கள் இருக்கின்றன அவற்றில் ஒன்றுதான் மதங்கீஸ்வரர் திருக்கோவில்.
பல்லவ மன்னனான ராஜசிம்ம பல்லவன் தொடங்கி இந்த கோவிலின் கட்டிட பணி இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் முடிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 1400 வருடங்கள் பழமையான இக்கோவிலில் பல அற்புதமான சிற்பங்கள் இன்றுவரை காண்போரை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.காஞ்சி புராணத்தில் இத்தலத்தின் சிவலிங்கமானது மதங்கி முனிவரால் நிறுவப்பட்டு வழிபடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மதங்கி முனிவர் இத்தல ஈசனை வழிபட்டு ஐம்புலன்களை அடக்கி ஆற்றலை பெற்றதாக ஐதீகம். இவ்வாலயத்தின் சிறிய நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் முதலில் தென்படுகிறது ஒரு சிறிய மேடையில் அமைந்த நந்தி சிற்பம். வலதுபுறத்தில் சற்று தொலைவில் ஆலயம் காட்சி தருகிறது. மணல் கற்களால் கட்டப்பட்ட மதங்கீஸ்வரர் ஆலயம் அளவில் மிக சிறியதாக காணப்படுகிறது. ஆனால் தளத்தில் உள்ள சிற்பங்கள் வியக்க வைக்கும் அளவிற்கு கலை நுணுக்கத்தில் அமைந்துள்ளன.
மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள கோவிலின் கருவறைக்குள் அமைந்துள்ள ஈசனை வழிபட கோவிலின் முன்புறத்தில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் நான்கு பக்க முனைகளிலும் சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள வீரனின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் பல்லவர்களுக்கே உரிய சிம்ம தூண்கள் அழகுற காட்சி தருகின்றன. முகமண்டபம் மற்றும் கருவறை என்ற அமைப்போடு திகழும் இத்தலத்தின் கருவறைக்குள் 16 பட்டைகளுடன் அமைந்த சிவலிங்கம் உள்ளது .
லிங்கத்தின் முன்னால் நந்தி சிற்பம் அமைந்துள்ளது. லிங்கத்தின் பின்புற சுவரில் சோமாஸ்கந்த வடிவம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தின் சுவரின் நுழைவாயிலின் இருபுறமும் இரு துவாரபாலகர்கள் அமைந்துள்ளனர். முகமண்டபத்தின் உட்புறச் சுவர்களில் கைலாய மலையை அசைக்கும் இராவணனின் புடைப்பு சிற்பம் அற்புதமாக காட்சி தருகிறது. மேலும் கஜசம்ஹார மூர்த்தி கங்காதர மூர்த்தி மற்றும் ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் முதலான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.