மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்.!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று (ஏப்ரல் 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2021-04-15 08:44 GMT

கொரோனா தொற்றுக்கு இடையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்ச்சியால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இதனை காண்பதற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என பல லட்சம் பேர் ஒன்றாக கூடுவார்கள். ஆனால் கடந்த முறை கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா மிகவும் எளிமையாக நடைபெற்றது.


 



இந்த முறை கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மீண்டும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை போன்று மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று (ஏப்ரல் 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி சுந்தரேசுவரர் சன்னதி முன்பு உள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த விழா காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, தீபாராதனை காண்பித்து கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது. கோயில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Similar News