மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் - இறைவனை வணங்க அப்படி என்ன சிறப்புகள் இந்த மாதத்தில்?
மார்கழி மாதத்தின் மகத்துவம் பற்றியும் இறைவனை வழிபாடு செய்யும் முறை பற்றியும் காண்போம்.
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆணி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும் ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் அமையும். அப்படி பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது. தேவர் அவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால் மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார்.
மார்கழி மாதம் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார் .சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்துவிட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களை குறைத்து இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறு எந்த நிகழ்வுகளையும் நடத்தாமல் பார்த்துக் கொண்டார்கள் .
அதன்படியே மார்கழியில் சுப நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டும் அல்ல உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடமிருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும் கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால் தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்கிறார்கள் .