மகாளய பட்ச அமாவாசையும் பித்ருக்கள் வழிபாட்டின் சிறப்புகளும்

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை என்பது பித்ருக்கள் வழிபாட்டிற்கு மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது.

Update: 2022-09-23 08:30 GMT

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். பட்சம் என்றால் 15 நாட்கள் என்று பொருள். இந்த இந்த பதினைந்து நாட்களும் பித்ருக்ளாகிய நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து இறங்கி பூலோகம் வந்து நம் அருகிலேயே இருந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மகாளய அமாவாசை என்று பெயர். தை அமாவாசை, ஆடி அமாவாசையை விட சிறப்புமிக்கதாக இந்த புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை திதி கருதப்படுகிறது.


இந்த அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்களுக்கு திதி கொடுப்பதும் அவர்களை மனதில் நினைத்து பூஜித்து நாம் நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்று மனதார வழிபடுவதும் மிகச் சிறந்த பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் நம்மை சபித்து விடுவார்கள் என்பதும், அதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகமாக கூறப்படுகிறது.


நம் மூதாதையர் இவ்வுலகை நீத்த நாளில் அவர்களுக்காக தர்ப்பணம் என்ற நீத்தார் கடனை நிறைவேற்றி, மானசீகமாக அவர்களை தம் இல்லத்திற்கு வரவழைத்து, சாதம் இட்டு, அவர்கள் உயிரோடு இருக்கும்போது அவரைப் பராமரித்த பாவனையில் நடந்துகொள்வது இந்த சம்பிரதாயத்தின் நோக்கமாக உள்ளது.


ஆகவே இத்தகைய சிறப்பு மிக்க மகாளய பட்ச அமாவாசை தினத்தன்று நம் முன்னோர்களை மனதார நினைத்து பூஜித்து தர்ப்பணம் கொடுத்து நம் இல்லற வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவோம்.

Similar News