திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்.. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.!

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்.. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.!

Update: 2020-11-15 13:29 GMT

முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்கப்படுகிறது.


இதனையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கப்படுகிறது.

நாளைமுதல் தொடங்கி 12 நாட்கள் நடைபெறும் விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. வழக்கமாக நடைபெறும் கடற்கரைக்கு பதிலாக, கோவில் கிரிபிரகாரத்தில் கிழக்கு பகுதியில் சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. 7-ம் திருநாளான 21-ம் தேதி சனிக்கிழமை, இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.


கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் 6, 7-ம் திருநாள்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற விழா நாட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

கோவில் வளாகம், மண்டபம், விடுதிகளில் தங்குவதற்கும், விரதம் இருப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் காத்திருப்பதற்காக தற்காலிக தங்கும் இடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Similar News