பெரும்பாலும் நம் ஆழ்மன வெளிபாட்டின் ஒரு பிம்பமாகவே கனவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு தனிமனிதரும் அவர்களின் எண்ணவோட்டத்திற்கு தகுந்தவாறு கனவு காண்கின்றனர். அந்த கனவுகளுக்கான அர்த்தத்தை ஒவ்வொரு கலாச்சாரமும் ஒவ்வொரு விதமாக அர்த்தப்படுத்துகின்றன. ஒரு சிலர் இதனை உளவியல் பார்வையோடு அர்த்தப்படுத்துவார்கள், சிலர் தெய்வீக சக்திகள் நமக்கு உணர்த்தும் சமிக்கை என்றும் புரிந்து கொள்கின்றனர்.
அந்த வகையில், கோவிலுக்கு செல்வதை போன்ற கனவு வந்தால், அதன் அர்த்தம் என்ன? இந்த கேள்விக்கு துல்லியமான பதில் கிடைக்க வேண்டுமெனில், அந்த கனவு வருகிற சூழலில் அந்த மனிதருக்கு என்ன மாதிரியான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறார் என்பதை ஆராய வேண்டும். உணர்வு ரீதியாக, உளவியல் ரீதியாக என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பது முக்கியம். இதில் தெளிவு இருந்தால், கோவில் சார்ந்த கனவுகளின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்வது எளிது.
அடிப்படையில் கோவில் என்பது புனிதத்துவம் வாய்ந்த இடம், இறைவனும், இறையருளும் நிறைந்திருக்கிற இடம். தொடர்ச்சியான நல்லதிர்வுகள், பிரார்த்தனைகள் போன்ற நேர்மறை ஆற்றல் நிறைதிருக்கிற இடம். எப்போதெல்லாம் மனிதர்கள் மனசோர்வு அடைகிறார்களோ அல்லது புத்துணர்வு பெற வேண்டும் என நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் செல்வது கோவிலுக்கு தான். எனவே, கனவுகளில் கோவிலை கண்டால், ஒருவகையில் உங்கள் மனம் ஒரு பாதுகாப்பான, செளகரியமான மற்றும் நிம்மதியை தேடுகிறது என்று பொருள் கொள்ளலாம்.
மற்றொரு வகையில் சிந்தித்தால், தெய்வீக சக்தி நமக்கு சில சமிக்கைகளை அளிக்கும் ஊடகமாக கனவுகள் செயல்படுகின்றன. உதாரணமாக வேண்டுதல்கள் ஏதாவது பாக்கி இருந்தால், அது நம் அடிமனதின் நினைவில் இருந்து காலவோட்டத்தில் நாம் மறந்திருந்தால் அதன் நினைவூட்டலாக இருக்கலாம். இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற தெய்வீக சமிக்கைகளை நாம் உணர்வதற்கான வாய்ப்பாகவும் கோவில் கனவுகள் அமையும்.
அடுத்து நமக்கு இருக்கும் தெய்வீக பாதுகாப்பை நாம் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு. வேலை அழுத்தம் அல்லது வேறு விதமான மன அழுத்தங்கள் இருந்து நாம் கவலையுடன் இருந்தால், எதை நினைத்தும் கவலைப்பட தேவையில்லை கடவுளின் அருள் பரிபூரணமாக உங்களுடன் உண்டு என்பதை உணர்த்துவதற்காக கோவில் கனவுகள் வந்திருக்கலாம்.