பறவைகளில் மயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாதுகாப்பின் குறியீடாக மயில் பார்க்கப்படுகிறது. மயில் குறித்த ஏராளமான குறிப்புகள் நம் புராணங்களில் உண்டு. எனினும், மயில் குறித்து சொல்லப்படும் மற்றொரு முக்கியமான விஷயம், அதன் இறகை வீட்டில் வைக்க தோஷங்கள் நீங்கும் என்பதே.
உலகெங்கும் இருக்கும் நாடுகளை விடவும், மயில் இந்தியாவில் தான் அதிகம் கொண்டாடப்படுகிறது. நமது கடவுளர்களும் மயிலை தங்களின் வாகனமாக ஏற்று கொண்டுள்ளனர். முருகனுக்கு மயில் வாகனமாகவும், கிருஷ்ணருக்கு மயில் பீலியும் அவர்களின் அடையாளங்களுள் ஒன்றாகும். முருகனுக்கு ஏந்தும் காவடியை மயில் பீலியால் அலங்கரிக்கும் வழக்கமும் நம்மிடையே உண்டு. காரணம், மயில் பீலி மிகவும் புனிதமானதாக நம் மரபில் கருதப்படுகிறது.
மயில் என்பது இலட்சுமி தேவியின் அம்சம் என்றும் சொல்லுவர். அதிர்ஷ்டம், கருணை, காருண்யம், மற்றும் செல்வ வளம் ஆகியவற்றியின் அடையாளமாக திகழும் இலட்சுமியின் அம்சமாக இவை திகழ்வதால். மயில் இறகை வீட்டில் வைத்திருப்போருக்கும் இவையனைத்தும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆன்மீக முக்கியத்துவத்தை உணராமல் சிலர் மயில் பீலியை அலங்காரத்திற்காக பயன்படுத்துவதும் உண்டு.
அலங்கார பொருள் என்பதை தாண்டி அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை ஒருவர் புரிந்து கொள்ளும் போது, அதை ஆக்கப்பூர்வமாக பல வழிகளில் நாம் பயன்படுத்த முடியும். உதாரணமாக, எட்டு மயிலறகுகளை ஒன்றாக இணைத்து வெள்ளை நூலில் கட்டி, ஓம் சோமை நமஹ என்று கூறி வர, அவை வாஸ்து தோஷங்களை நீக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.
மேலும் பணம் வைக்கும் இடத்தில் மயில் பீலியை வைப்பதால், அவை செல்வ வளத்தை ஈர்க்கும் என்பது ஐதீகம். மேலும் வாஸ்து தோஷத்தினால் ஏதேனும் எதிர்மறை தாக்கங்கள் வீட்டில் நிறைந்திருந்தால், அந்த ஆற்றலை நீக்கும் தன்மை மயில் இறகுகளுக்கு உண்டு. எனவே, மயிலறகை வீட்டின் முகப்பில் வைப்பது நன்மையை தரும்.
அலங்காரத்திற்காக அல்லாமல், உண்மையான தோஷங்களை போக்குவதற்காக மயிலறகை வீட்டில் வைத்தால், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். அதன் மீது தூசு அழுக்கு அண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆன்மீக தன்மைகளை தாண்டி, மயிலறகு வீட்டில் இருக்கும் போது பூச்சிகள் அண்டாது. அந்த இடம் சுத்திகரிக்கப்பட்டு, மிகவும் ஆரோக்கியமான சூழல் உருவாகும். இதுவும் அதன் முக்கியத்துவங்களுள் ஒன்றாகும்.
Image : Pixabay