நமது மரபில் ஒவ்வொரு நாள், கிழமை ஏன் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிரத்யேக பலன்கள், சிறப்புகள் உண்டு. அதனால் தான் விரதம் பூஜை ஆகியவற்றை குறிப்பிட்ட நாள்களில் செய்ய சொல்லி அறிவுருத்தினர் நம் முன்னோர். அந்த வகையில் வியாழன் என்பது குருவுடன் தொடர்புடைய நாளாகும். ஒன்பது கிரகங்களில் முக்கியமானது குரு எனும் வியாழன் கிரகம். தேவ குரு பிரகஸ்பதியின் அருளை பரிபூரணமாக பெற்ற ஒருவர் நிச்சயம் அனைத்திலும் வெற்றி காண்பார் என்பது நம்பிக்கை
இந்த வியாழக்கிழமையில் நாம் செய்யக்கூடிய சிறிய செயல்கள் நம் வெற்றிகரமான வாழ்விற்கு வழிவகுப்பதாக இருக்கும் என சொல்கின்றனர். வியாழக்கிழமையில் நெற்றியில் குங்குமம் அல்லது மஞ்சள் அணிவது மிகுந்த பலனை கொடுக்கும். பொதுவாக இந்நாளில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் குங்குமம் அல்லது மஞ்சள் என்பது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் எனவும் சொல்லப்படுகிறது.
செல்வ செழிப்பை ஒருவர் பெற வேண்டுமெனில், கடுமையான உழைப்பும் விடா முயற்சி இவைகளே மூலதனம். இருப்பினும் ஜோதிட ரீதியாக செய்யக்கூடிய சில காரியங்கள் பொருளாதார வெற்றிக்கு ஏதுவாக அமையும். அந்த வகையில் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிறத்தால் ஆன வஸ்துக்களை தானமாக கொடுப்பது மிகவும் உகந்தது.
நல்லதிர்வுகளை, நல்ல அதிர்ஷ்டங்களை நம் பக்கம் ஈர்க்க, சிவபெருமானுக்கு மஞ்சள் நிறத்தால் ஆன இனிப்பு வகைகளை படைப்பது சாலச்சிறந்தது. அதுமட்டுமின்றி இந்த நாளில் வாழை மரத்திற்கு உரிய பூஜை மற்றும் வழிபாடுகளை செய்து வர நல்ல பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.
மஹா விஷ்ணுவிற்கு மஞ்சள் நிறத்தால் ஆன செவ்வந்தி மலர் மாலையை அணிவித்தால் நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் கூடும் என்பது நம்பிக்கை. மஞ்சள் நிற ஆடைகளை வியாழக்கிழமையில் அணிவது குருவுக்கு ஏற்புடையது என்பதால் மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் இது நன்மை பயக்கும் என்பதால். வியாழக்கிழமை விரதத்தின் போது உப்பை தவிர்ப்பது நல்ல பலன்களை கொடுக்கும். மன அமைதி, மகிழ்ச்சி, செளபாக்கியத்திற்கு “ஓம் நமோ நாராயணா “ மந்திரத்தை வியாழக்கிழமைகளில் பாராயணம் செய்வது நல்லது.