மன குழப்பத்தை போக்கும் சோமவார விரதம்!
கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமை தோறும் கடைபிடிக்கப்படும் விரதம் சோமவார விரதம் . சோமன் என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள் படும்.
கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் இருந்து சோமவார விரதத்தை தொடங்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம். அல்லது ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள், 14 ஆண்டுகள் என்ற முறையில் விரதத்தை தொடரலாம்.இத்தனை ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் எடுத்துக்கொண்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
சந்திர பகவான் கார்த்திகை மாதம் சுக்கிலபட்ச அஷ்டமியில் தோன்றியவர். அவர் பெரியவர் ஆனதும் ராஜசூய வேள்வி நடத்தி புகழ் பெற்றார். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன் தனது 27 பெண்களையும் சந்திரனுக்கு மனைவிகளாக தாரை வார்த்து கொடுத்தார். ஆனால் சந்திரன் அவர்களில் ரோகினியிடம் மட்டும் அதிகப்பற்றுதல் கொண்டிருந்தார். அதனால் கவலை அடைந்த மற்றவர்கள் இது பற்றி தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். அவர் சந்திரனிடம் எனது மகள்கள் எல்லோரிடமும் சமமாக அன்பு செலுத்து என்று கூறினார்.
ஆனால் சந்திரன் அதைக் கேட்பதாக இல்லை. ரோகினியிடம் மட்டும் அதிக அன்புடன் நடந்து கொண்டார். இதனால் கோபம் அடைந்த தட்சன் நீ நாளுக்கு நாள் தேய்ந்து போவாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். அது பலித்தது. தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதை கண்ட சந்திரன் மிகவும் கவலை உற்றார் .இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டி பிரம்மதேவரிடம் முறையிட்டார். ஆனால் பிரம்மதேவரோ சிவனே தஞ்சமடையுமாறு கூறினார். சந்திரன் உடனடியாக சிவபெருமானை தஞ்சம் அடைந்தார்.
சாபத்திலிருந்து மீள ஒவ்வொரு திங்கட்கிழமை ஒவ்வொரு சிவாலயமாக சென்று வழிபாடு மேற்கொண்டார். சிவன் மனம் இறங்கி சந்திரனை தனது சடை முடியில் வைத்துக்கொண்டார். இதனால் சந்திரனின் சாபம் பாதியாக குறைந்தது. மாதத்தில் 15 நாட்கள் தேய்வதும் வளர்வதுமாக அவர் சாபம் மாறுதல் பெற்றது. இவ்வாறு சந்திரன் தேய்வதை கிருஷ்ணபட்சம் என்றும் வளர்வதை சுக்ல பட்சம் என்றும் அழைக்கலாகினர். கார்த்திகை மாத சோமவாரத்தில் தான் சந்திரன் சிவனுடைய தலைமுடியில் அமர்ந்து கொண்டார்.