நல்வாழ்வு அருளும் நாடி அம்மன்

திருமணத்தடை நீக்கி குழந்தை பெற அளிக்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலை பக்தர்கள் நல்வாழ்வு அருளும் நாடியமனாக மனதில் வைத்து வழிபட்ட வருகிறார்கள்.

Update: 2023-02-16 05:45 GMT

காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிவரும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தற்போது நாடியம்மாள்புரம்  என்று அழைக்கப்படும் இத்தலம் முற்காலத்தில் பெரிய வனமாக விளங்கியது. அக்காட்டிலே தஞ்சையை ஆண்ட மன்னர் வேட்டையாடுவதற்காக வந்தார். மன்னரும் மந்திரியும் வேட்டையாடிக்கொண்டிருந்த போது ஒரு முயல் துள்ளிக் குதித்து ஓடி புதருக்குள் சென்று மறைந்தது. அப்போது வேடர்கள் சிலர் முயலை துரத்திச் சென்று புதரை வெட்ட அந்த புதரில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனால் பதற்றம் அடைந்த வேடர்கள் புதரை விலக்கி பார்த்தபோது அந்த புதருக்குள் அம்பாள் சிலை ஒன்று இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேடர்கள் அம்மன் சிலையின் நெற்றியில் காயம் பட்டு அதில் இருந்த ரத்தம் பீறிட்டு வெளியேறியதைக் கண்டு மயக்கம் அடைந்தனர்.


உடனே அங்கு சென்று நடந்த விவரங்களை கேட்டறிந்த மன்னர் அம்பாளுக்கு அதே இடத்தில் கோவில் கட்ட உத்தரவிட்டு மானியமாக நிலங்களையும் வழங்கினார். பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமைகள் காப்பு கட்டி திருவிழா தொடங்கி 12 நாட்கள் அம்பாள் வீதி உலா வருவது கண்கொள்ளா காட்சி ஆகும். நாடி அம்மனுக்கு காப்பு கட்டியதும் பட்டுக்கோட்டை வாழ் மக்கள் பாயில் படுக்க மாட்டார்கள். நகரில் செக்கு ஆட்ட மாட்டார்கள் .உலக்கை சத்தம் கேட்காது. அந்த அளவுக்கு மக்கள் பயபக்தியுடன் இருப்பார்கள் . பட்டுக்கோட்டையிலும் சுற்றுப்புற பகுதிகளிலும்  நாடிமுத்து, நாடியான், நாடியம்மை என்று குழந்தைகளுக்கு பெயர் வைப்பது அதிகம் உண்டு. நாடியம்மன் கோவில் சில காலம் பரம்பரை அறங்காவலர்களின் பொறுப்பில் இருந்தது. தற்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.


பட்டுக்கோட்டை நகரின் குல தெய்வமாக விளங்கும் நாடி அம்மன் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் தெய்வமாகும். குழந்தை பேறு, திருமணத் தடை விலக்கும் முக்கிய தலமாகும். இந்த கோவில் தலவிருட்சம் நாகலிங்க மரமாகும். கானகத்தில் கற்சிலையாக கிடைத்த நாடி அம்மனுக்கு பொற்சிலை வடித்துக் கொடுத்தார் சின்னான் என்பவர். நாடியம்மன் அருளால் மாதம் மும்மாரிப் பொழிந்து வரகு பயிர் வளமுடன் விளைந்தது. இதனால் மனமகிழ்ந்த  சின்னான் "அம்பிகையே உன் அருளால் எனது காணியில் வரவு விளைந்து வீடுகொள்ளாத அளவுக்கு நிறைந்துள்ளது. உன் அருள் நாடி வந்த எனக்கு செல்வத்தை கோடி கோடியாய் குவிக்கிறாய். ஆனால் நான் உனக்கு எதைக் கொடுப்பது? எதை விடுப்பது? என்று தவிக்கிறேன்" என்று அம்பாளை வேண்டினார். அப்போது அம்பாள் சின்னானின் கனவில் தோன்றி எனக்கு வரகரிசியினாலே மாலை தொடுத்து போடு என்று ஆணையிட்டாராம்.அன்று முதல் சின்னான் வசித்து வந்த செட்டியார் தெருவில் பங்குனி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி மூன்றாம் செவ்வாய் இரவு அம்பாள் மகா மண்டபத்திற்கு எழுந்தருளி தினமும் வீதி உலாவும்,  ஆறாம் நாள் ஞாயிறு காலை சரஸ்வதி தரிசனம் இரவு மின்னல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் மகா மண்டபத்தில் இருந்து அம்மன் எழுந்தருளி செட்டியார் தெருவில் அம்பாளுக்கு பதுமைகள் வரகரிசி மாலை போடும் விழா அதி விமரிசையாக நடைபெறும்.

Similar News