தீராத நோய்களை தீர்க்கும் திருத்தினை நகர் ஈசன்!
உலகில் எங்கும் காணாத அதிசய கோவில் ஒன்று உண்டெனில் அது கடலூர் அருகே உள்ள திருத்தினை நகரில் உள்ள சிவ கொழுந்தீஸ்வரர் ஆலயம் எனலாம்.
இத்திருத்தலம் கிருதயுகம் மற்றும் திரேதாயுகத்தில் 'ஓம்காரமுகம்' என்றும் துவாபர யுகத்தில் 'தேசப்பிரதம்' என்றும் கலியுகத்தில் தொடக்கத்தில் 'ஞானப்பிரதம்' என்றும் அழைக்கப்பட்டது. தற்போது திருத்தினை நகர் என்று போற்றப்படுகின்றது. வழக்கில் இவ்வூர் தீர்த்தனை கிரி என்று வழங்கப்படுகிறது .சிவரகசியம் என்னும் நூலில் இத்தள மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இத்தளத்தின் மகிமையை பற்றி அகத்தியருக்கு முருகப்பெருமான் உபதேசத்துள்ளார்.
இத்தல ஈசனை வணங்கியே முராசுரன் என்ற அசுரனை திருமால் வதம் செய்தார் அதன் மூலம் திருமாலுக்கு 'முராரி' என்ற பெயர் வந்தது. துர்வாச முனிவரால் சாபம் பெற்ற பிருங்கி மகரிஷி இத்தளம் வந்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார். கருடன் பெருமானை பூஜித்து பலம் பெற்று தன் தாயின் அடிமை தளையை தகர்த்ததாகவும் சொல்லப்படுகிறது . ராவணனை வெல்வதற்கு ராமருக்கு உதவியாக இருந்ததுடன் ராமரின் பட்டாபிஷேகத்தையும் கண்டு களித்த ஜாம்பவான் இத்திருத்தளத்தில் உள்ள ஈசனை வெகு காலம் பூஜித்து பூரண ஆயுளும் ஞானமும் பெற்றிருக்கிறார்.
கந்தன் உமாதேவி நந்திதேவர் அகத்தியர் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கம் இத்தல மூலவர் என்பது குறிப்பிடத்தக்கது. பதஞ்சலி கோரிக்கைக்கு இணங்கிய இத்தளப் பெருமான் திரு நடன காட்சியை இங்கு காட்டிய பின்னரே தில்லையில் காட்டியதாகவும் தல வரலாறு சொல்கிறது .அகத்தியருக்கு தன்னுடைய திருமணக் காட்சியை இந்த திருத்தலத்திலும் ஈசன் காட்டி அருளி இருக்கிறார். பெரியான் எனும் ஏழை விவசாயியின் பேரன்புக்கு பணிந்த சிவபெருமான் இந்த விவசாயி படைத்த அமுதை உண்டு அவருக்கு மோட்சம் அளித்துள்ளார். ஒரு சமயம் வங்கதேசத்து அரசனானன வீரசேனன் இத் தளத்திற்கு வந்தபோது தோல் நோய் பிடித்திருந்த நாய் ஒன்று இத்தல தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கி நல்ல நிலையிடம் திரும்பியதை கண்டான்.