ஐயங்கள் நீக்கும் ஐந்தாம் நாள்: ஸ்கந்த மாதா வழிபாடு !

Update: 2021-10-11 00:00 GMT


ஐயங்கள் போக்கி அனைத்து நன்மைகளையும் அள்ளி வழங்கும் நவராத்திரியின் ஐந்தாம் நாள். அன்னையின் ஒன்பது அம்சங்களில் மிக முக்கியமான அம்சம் ஸ்கந்த மாதா. மகளாக ,கன்னியாக, மணமான சுமங்கலியாக தொடர்ந்து இன்று தாயான ரூபத்தை வழிபடும் நாள். பெண்மையின் அனைத்து அம்சங்களையும் வழிபடுவதே இந்த நவராத்திரியின் நோக்கம்.

ஸ்கந்தா என்பது கந்த பெருமான் முருகனை குறிக்கிறது. கந்த பெருமானின் அன்னையான பார்வதி தேவியை கந்தனின் அன்னை என்றழைப்பதே ஸ்கந்தமாதா எனும் அவதாரத்தின் பொருளாகும். ஞானிகளை, ரிஷிகளை, தேவர்களை மற்றும் மனிதர்களை கொடுமை செய்து வந்த தாரகாசுரனை வதைக்க அன்னையின் வரம் வாங்கி பிறந்தவர் கந்த பெருமான். அரக்கனை அழிக்க மூல காரணமாக இருந்த அன்னையை நவராத்திரியின் ஐந்தாம் நாளில் வணங்கி பணிவதால் எதிரிகளின் அச்சமின்றி நல்வாழ்வை பெற முடியும்.

மேலும் இந்த ரூபத்தில் அன்னை நான்கு கரங்களுடன், ஆறுமுகனை தன் மடியினில் ஏந்தி காட்சி தருவார். மேலும் தன்னுடைய இரு கரங்களில் தாமரையை ஏந்தி, தாமரை மலரிலேயே அமர்ந்தும், பத்மாசன தேவி என்கிற பெயரும் உண்டு. பரிசுத்தமான காட்சி, பக்தர்களை அருள் கடலில் ஆழ்த்தும் தியான நிலை ஆகியவற்றை கண்டு பணிந்து வணங்கும் பக்தர்களுக்கு மன அமைதியும், ஆன்ம நிறைவும் கிடைப்பது உறுதி.

இந்த நாளில் ஒருவர் தீவிர பக்தியுடன் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்னையை நினைத்து வணங்குகிற போது அவர்களின் விசுத்தி சக்கரத்தின் ஆற்றல் அதிகரிப்பதாக சொல்லப்படுவதுண்டு. மேலும் பக்தர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் நீங்கி நல்ல சிந்தனைகளே அவர்களின் மனதில் தங்கும்.

ஸ்கந்த மாதாவுக்கு உகந்த நிறம் வெளிர் சிவப்பு. இந்நாளில் அம்பிகைக்கு சிவப்பு நிறத்திலான மலர்கள், குறிப்பாக செம்பருத்தியை வைத்து வணங்கி, பின்வரும் ஸ்துதியை சொல்லுவது சிறப்பு

"யே தேவி ஸர்வபூதேஷு மா ஸ்கந்தமாதா ரூபினே ஸ்மஸ்தித்தா "

இந்த துதியை சொல்லி வழிபட்டு வர மனதிலுள்ள அனைத்து தீய சிந்தனைகள் நீங்கும். அம்பிகை அன்னையின் வடிவை கொண்டிருப்பதால், இன்று வழிபடும் அனைவருக்கும் தாயுள்ளத்துடன் தன் அருளை அள்ளி வழங்கி சிறு பிள்ளையை அரவணைக்கும் தன்மையோடு நமக்கு அருளுகிறாள். மேலும் இன்றைய நாளில் ஸ்கந்த மாதாவை வணங்குவதால் தாய் பார்வதியின் அருளை பெறுவது மட்டுமின்றி, கந்தரின் அருளையும் ஒருவர் பரிபூரணமாக பெற முடியும்.

Image : Rudraksha Ratna

Tags:    

Similar News