ஏற்றங்களை அருளும் நவராத்திரியின் ஏழாம் நாள். நவ துர்க்கையின் ஒன்பது அவதாரங்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது என்றாலும், இந்த ஏழாவது நாளின் வடிவம் மிகவும் சக்தி வாய்ந்தது. தேவியின் ஒன்பது ரூபங்களில் மிகவும் ஆக்ரோஷமான ரூபம் காலராத்ரி. இதுவே நவதுர்க்கையின் ஏழாவது அம்சம்.
அடர்த்தியான நிறத்தில் அவள் கொண்டிருக்கும் உக்கிர ரூபம் பார்ப்பதற்கு மெய் சிலிர்க்க வைப்பதாகும். பரந்து விரிந்த அவளது சிவப்பு கண்கள், சிவப்பு நாக்கு கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம். தீமைகளை அழிப்பதற்கு அவள் ஏற்றிருக்கும் இந்த ரூபம் காளி என்றழைக்கப்படுவதுண்டு. காலனின் இறப்பையே குறிப்பவள் என்பதாலும், இரவை ஒத்த அடர்த்தியான நிறத்தை உடையவள் என்பதாலும் காலராத்ரி என்கிற பெயர்.
கழுதையை வாகனமாக கொண்டு நான்கு கரங்கள், ஒரு கரத்தில் வர முத்திரை, மற்றொரு கரத்தில் அபய முத்திரை, மற்ற இரு கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறாள். பார்க்க உக்கிரமாக இருப்பினும் அவள் வழங்கும் அருள் எல்லையற்றது. அவளை வணங்குவோருக்கு அச்சமும், பயமும் துளியும் அண்டாது. மேலும் ஏழாம் நாளில் அன்னையை வணங்குவதால் பக்தர்கள் தங்கள் சகஸ்ரஹார சக்கரத்தின் மீது சக்தியைப் பெறுகிறார்கள்.
இந்து புராணத்தில் ஒரு கதையுண்டு. பெரும் அரக்கனான அசுரன் ரக்தபீஜன் என்பவனை யாராலும் அழிக்க முடியாமல் இருந்தது. காரண, அவனை அழிக்க முற்படுகையில் அவனில் இருந்து கசியும் ஒரு துளி ரத்தமும் மற்றொரு அரக்கனை உருவாக்கக்கூடும். அந்த வகையில் சிதறிய ரத்த துளிகளில் இருந்து இலட்சக்கணக்கான ரக்தபீஜ அரக்கர்கள் இருந்ததாகவும் அவனை அழிக்கவே தாய் இப்படியொரு ஆக்ரோஷ ரூபத்தை எடுத்தார். அந்த பிரம்மிப்பான ரூபத்தை கண்டு இந்த பிரபஞ்சமே அஞ்சி நடுங்கியது அசுரனை அழித்து பின் தாயுள்ளத்தோடு இந்த உலகையும், உலக மக்களையும் காத்து ரக்ஷித்தார்.
நவராத்திரி பூஜையில் மாதா காலராத்ரி க்கு செய்யப்படும் பூஜையானது மகா பூஜை என அழைக்கப்படுகிறது. அன்னைக்கு உகந்த நிறம் பழுப்பு, அன்னையை வணங்குகிற போது "ஆவும் தேவி காலராத்திரியை நமஹ| என சொல்லி வணங்க வேண்டும். அன்னைக்கு அர்பணிக்க வேண்டிய மலர் கிருஷ்ண கமலம்.
எந்த எதிர்பார்ப்புகளுமின்றி முழுமையான பக்தியுடன் அன்னையை வணங்கி வழிபடும் போது அளவற்ற ஆனந்தமும், செல்வ வளமும், பக்தர்களுக்கு கிடைக்கும் என்பது திண்ணம்.
Image : DNA India