நன்மைகளை வழங்கும் நவராத்திரி வழிபாடு!
புரட்டாசி மாதமும் பங்குனி மாதமும் எமதர்மராஜாவின் இரண்டு கோரை பற்கள் என்று கூறுவார்கள். இந்த கோரைப்பற்களில் அகப்பட்டு துன்பப்படாமல் இருக்க நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
சுரதன் என்ற மன்னன் தான் ஆட்சி செய்த தேசத்தை நல்ல முறையில் ஆண்டு வந்தான்.எல்லாவிதமான தர்மங்களும் தெரிந்த அந்த மன்னனை மக்கள் அனைவரும் போற்றினார். அந்த நேரத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு பிரதேசத்திலிருந்து ஒரு பிரிவினர் சுரத மன்னனின் நாடு முழுதும் படையெடுத்து வந்தனர். சுரத மன்னன் நல்ல வீரனாகவும் போத்திறமை மிக்கவனாகவும் இருந்தாலும் சூழ்ச்சியின் காரணத்தால் அந்த போரில் தோல்வி அடைந்தான். தன் மந்திரிகளே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்ததை அறிந்து வருந்திய மன்னன் தன் நாட்டை விட்டு காட்டிற்கு சென்றான்.
அப்போது காட்டில் தவம் செய்து கொண்டிருந்த சுமேதஸ் என்ற மகரிஷியை சந்தித்தார். அவரிடம் தன்னுடைய நிலைமையை சொல்லி வருந்தினான். அந்த மகரிஷி மன்னனிடம் சில நாட்கள் இங்கேயே தங்கி இரு என்றார். அப்படி அவ்விடத்தில் மன்னன் தங்கி இருந்த நேரத்தில் சமாதி என்ற வியாபாரி ஒருவனும் அங்கு வந்து சேர்ந்தான். அவனும் மகரிஷியயிடம் "தான் நல்ல முறையில் வியாபாரம் செய்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னை சேர்ந்த மற்றவர்கள் செய்த சூழ்ச்சியால் அனைத்து செல்வத்தையும் இழந்தேன். என் மனைவி பிள்ளைகளும் என்னை மதிக்கவில்லை. அதனால் கடன் அதிகமாகி மனம் வருந்தி தனித்து இந்த காட்டை வந்தடைந்தேன்" என்றான் .
மன்னனையும் வியாபாரியையும் பார்த்து "உங்கள் இருவருக்கும் துயரங்கள் தீர அற்புதமான தேவியின் மந்திரத்தை உபதேசிக்கிறேன். இதை மனதில் இருந்து ஜெபியுங்கள் " என்றார் மகரிஷி. அவர்களும் தேவியின் அந்த மகா மந்திரத்தை மனதில் இருந்து நீண்ட காலம் ஜெபம் செய்தனர். தேவியின் உருவத்தை மண்ணில் செய்து வழிபட்டனர். அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்து தேவி அங்கு தோன்றி உங்கள் இருவருக்கும் என்ன வேண்டும் என்று கேட்டாள்.அவர்களும் தங்கள் நிலையை சொல்லி வரம் கேட்டனர்.