மனத்துன்பம் நீக்கும் பொறையார் விஸ்வநாதர்!

சோழ மன்னர்கள் தஞ்சையை ஆட்சி செய்த போது இந்த ஊரை பிறையாறு என்று அழைத்தனர். இக்கோவில் சோழ மன்னர்களின் கட்டிடக்கலையில் அமைந்துள்ளது.

Update: 2024-06-04 16:47 GMT

கடலும் கடல் சார்ந்ததுமான இப்பகுதியை சோழ மன்னர்கள் ஆட்சி செய்த போது அவர்களுக்கு கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர் பெரியன் இக்கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது .ஆனால் அதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை . இக்கோவிலை கட்டிய குறுநில மன்னரான பெரியனுக்கு நடராஜர் இரு ஜடைகளோடு ஒரு ஜடையில் கங்கையும் இன்னொரு ஜடையில் பிறையும் நாரை இறகுகளை கிரீடமாகவும் சூடிய படி காட்சி கொடுத்ததாக செவி வழி செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு பார்த்த ஆலயம், மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஐந்து கலசங்களைக் கொண்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோபுரத்தின் அனைத்து நிலைகளிலும் அற்புதமான சுவாமி சிலைகள் சுதை சிற்பமாக காட்சி தருகின்றன. அதை அடுத்து பலிபீடம், கொடிமரம் ,நந்தி உள்ளன. அவற்றை வணங்கி உள்ளே சென்றால் சபா மண்டபம் உள்ளது .இதில் நடராஜர் - சிவகாமசுந்தரி சன்னதியில் மேல் பகுதியில் ராசி மண்டலமும் காணப்படுகிறது .மகா மண்டபத்தில் நந்தி பலிபீடம் அனுக்கிய விநாயகர், சோமாஸ்கந்தர் மற்றும் உற்சவர் சிலைகள் உள்ளன.

அர்த்தமண்டபத்தில் வலது பக்கம் அம்பாளும் தெற்கு திசை நோக்கி நான்கு திருக்கரங்களோடு விசாலாட்சி அம்பாளும் காட்சி தருகிறார்கள். கருவறையில் கிழக்கு நோக்கி சதுர பீடத்தில் பாணலிங்கமாய் விஸ்வநாதர் காட்சி தருகிறார். இறைவனின் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், குரு பகவான், அண்ணாமலையார், பிரம்மா, சிவதுர்க்கை திருமேனிகள் அமைந்துள்ளன .இந்த ஆலயம் பித்ரு தோஷ நிவர்த்தித்தலமாக விளங்குகிறது. காசிக்கு நிகராக இங்கு பித்ரு தோஷ வழிபாடுகள் நடைபெறுவதாக கூறுகின்றனர்.

திருமணத் தடை உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று மூலவருக்கும் அம்பாளுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் விரைவில் திருமணத் தடை நீங்கும். அதன்படி திருமணம் நடைபெற்றவர்கள் திருமணத்திற்கு பின் இந்த ஆலயம் வந்து இறைவனுக்கும் இறைவிக்கும் வாசனை திரவியங்களால் அபிஷேகம், வில்வ அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கடன் என்பது மன நிம்மதியை குலைத்து விடும் .நாம் வாங்கிய கடனை அடைத்து நிம்மதி பெற இத்தலத்தில் திங்கட்கிழமை தோறும் இறைவனையும் இறைவியையும் மனதார வேண்டினாலே போதுமானது. மலையளவு கடனாக இருந்தாலும் அதை கடுகளவு குறைத்து இத்தல இறைவன் விஸ்வநாதர் உங்களுக்கு அருள் புரிவார். நாகப்பட்டினத்தில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் பொறையார் திருத்தலம் உள்ளது.

Tags:    

Similar News