மதுரைக்கு எல்லையைக் காட்டிய தென்திருவாலய சுவாமி!
இறைவனின் திருவிளையாடல்கள் நிகழாத இடமே இல்லை. அதில் மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காத்த திருக்கடையூர் திருத்தலமும் ஒன்று. அந்த ஆலயத்திற்கு நிகரான தலம் ஒன்று மதுரையிலும் உள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் நிர்வாகத்திற்கு உட்பட்ட தென் திருவாலய சுவாமி திருக்கோவில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் மற்றும் திருநீற்று பதிகம் பாடல் பெற்ற பழமையான திருத்தலமாகும். 64 திருவிளையாடல் புராணக் கதைகளில் மதுரைக்கு எல்லையைக் காட்டிய படலம் நிகழப் பெற்ற தலம் இதுவாகும். பாண்டிய மன்னர்களில் சுகுன பாண்டியருக்கு பிறகு சித்திரரதன் முதல் அதுலகீர்த்தி வரை 22 பாண்டியர்கள் தொடர்ந்து அரசாட்சி புரிந்து வந்தார்கள்.
அதுலகீர்த்திக்கு பின்னர் அவனது மகன் கீர்த்திவீடணன் காலத்தில் ஒரு பிரளயம் ஏற்பட்டது. ஏழு பெருங்கடல்களும் பொங்கி உலகத்தை அழித்தன. மதுரையில் சோமசுந்தர பெருமாள் விமானம், மீனாட்சி அம்மனின் ஆலயம் மற்றும் இடபமலை,யானைமலை, நாகமலை, பசுமலை பன்றி மலை ஆகியவை மட்டும் அழியாமல் இருந்தன. வெள்ளம் வற்றிய பிறகு சிவபெருமானால் மீண்டும் உலகம் படைக்கப்பட்டது . தமிழ் வேந்தர் மூவரும் சந்திரன், சூரியன், அக்னி ஆகிய மூன்று குளத்தில் இருந்து இறைவனால் படைக்கப்பட்டார்கள்.
அக்காலத்தில் சந்திரகுலத்தில் இருந்து வந்த வங்கிய சேகர பாண்டியன் சோமசுந்தர பெருமாள் திருக்கோவிலைச் சுற்றி ஒரு சிறு நகரம் ஏற்படுத்தி ஆட்சி செய்தான். கோன் உயர குடி உயர்வது போல் நாட்டில் வளம் பெருகி மக்களும் பெருகி கொண்டிருந்தனர். இதனால் சிறிது கவலை உற்ற அரசன் சோமசுந்தர பெருமானை வணங்கி எம்பெருமானே இவ்வளவு மக்களுக்கும் விரிவான பெரு நகரம் அமைக்கப்பட வேண்டும். அடியேன் இதன் பழைய எல்லையை காண முடியவில்லை .எனவே எல்லையைக் காட்டி அருள் புரிய வேண்டும் என வேண்டினான்.