செல்வ செழிப்பை வழங்கும் முகப்பேர் மகாலட்சுமி!

சென்னை அருகே உள்ள முகப்பேர் மேற்கு பகுதியில் மரகதவல்லி உடனாய மார்க்கண்டேஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் மகப்பேரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் இங்கே 7 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் மகாலட்சுமி சிறப்புக்குரிய தேவியாக பார்க்கப்படுகிறார்.

Update: 2024-06-24 13:45 GMT

காஞ்சிபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தவன் மல்லிநாதன் என்ற சம்புவராய வம்ச மன்னன். சிவ பக்தனான அம்மன்னனுக்கு திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறவில்லை. குழந்தை பேருக்காக ஈசனிடம் வேண்டினான். அரசன் கனவில் தோன்றிய சிவபெருமான் பாலாற்றில் மூழ்கி கிடக்கும் என்னை பூஜித்து வழிபட்டு வா. கரையில் சிவ விஷ்ணு ஆலயம் எழுப்பு. உன் வம்சம் விருத்தியாகும் என்று அருளாசி வழங்கினார்.

அதன்படி பாலாற்றில் தேடி கண்டுபிடித்த லிங்கத்தைக் கொண்டு பிரதிஷ்டை செய்து கோவில் உருவாக்கினான். மகாலட்சுமி- சந்தன சீனிவாச பெருமாள் ஆகியோரின் சிலைகளையும் அங்கே பிரதிஷ்டை செய்தான். நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு ராஜகோபுரங்களுடன் பிரம்மாண்ட சிவ- விஷ்ணு ஆலயத்தை உருவாக்கினான். கோவிலில் நடைபெறும் நித்திய பூஜை, நிர்வாகம், பராமரிப்பு செலவு, உற்சவங்கள் போன்றவற்றிற்காக 700 ஏக்கர் நிலத்தையும் எழுதி வைத்தான். இதனைத் தொடர்ந்து ஈசன் அருளால் புத்திர பாக்கியம் பெற்றான் மல்லி நாதன். எனவே இவ்வாலயத்தை 'மகப்பேரீஸ்வரர்' கோவில் என்றும் இந்த பகுதியை 'மகப்பேறு' என்றும் அழைத்தனர்.

மகப்பேறு என்ற பெயரே திரிந்து தற்போது 'முகப்பேர்' என்று அழைக்கப்படுவதாக ஆலய தலவரலாறு சொல்கிறது . காலப்போக்கில் பாலாறு சுருங்கி ஓடையாக மாறி கழிவுநீரை சுமந்து செல்லும் கால்வாயாக மாறிப்போனது.பராமரிப்பு இல்லாததாலும் பல்வேறு படையெடுப்பு காரணமாகவும் இந்த ஆலயம் சிதலமடைந்து மண்மூடிப்போனது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிவ பக்தர் ஒருவர் இந்தக் கோவிலை மீட்டு உருவாக்கம் செய்தார். மூடி இருந்த மண் புதர்களை அகற்றி வழிபாட்டுக்கு வழி செய்தார். இந்த ஆலயத்தின் வில்வ மரத்து அடியில் 7 அடி உயரத்தில் மகாலட்சுமி தாயார் அருள் பாலிக்கிறார்.

இந்த அளவு உயரமான மகாலட்சுமி தேவியை வேறு எங்குமே காண இயலாது. இந்த தாயாருக்கு பௌர்ணமிதோறும் மாலையில் அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. இதில் கலந்துகொண்டு தாயாருக்கு புடவை சாற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு ஏற்படுவதுடன் வீடு, மனை, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் .இங்குள்ள மூலவர் பாணலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

மல்லிநாதன் மன்னனுக்கு முன்பு, ஆற்றின் கரையில் இருந்ததாக கூறப்படும் இந்த லிங்கத்தை மார்க்கண்டேய முனிவர் பூஜித்து நீண்ட ஆயுள் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இத்தல இறைவன் மார்க்கண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நிகரானதாக போற்றப்படுகிறது. மிக அபூர்வமான தாமரை வடிவ பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த பானலிங்கம் பக்தர்களுக்கு நல்வழி காட்டி அருளை அள்ளித் தரும் அமுத சுரபியாக இருக்கிறது. 

Tags:    

Similar News