தம்பதியர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் சிறுகுடி மங்களநாதர்!

மனைவிக்காக கணவன் விட்டுக் கொடுத்து வாழும் போது அந்த மனைவி மகிழ்ச்சி அடைவதுடன் கடவுளை அளவுக்கு அதிகமாக நேசிக்கவும் செய்வார். அதனால் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த தத்துவத்தை ஒரு கோவில் உணர்த்துகிறது.

Update: 2024-06-25 08:11 GMT

திருவாரூர் மாவட்டம் திருச்சிறுகுடியில் அமைந்துள்ள சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோவில். அம்பிகை தன் திருகரங்களால் மணலில் லிங்கம் பிடித்து வழிபட்ட தலம் இது. தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 123 வது தலமாகும். காவிரி தென்கரையில் அமைந்த தேவார பாடல் பெற்ற 60-வது திருத்தலம் .இத்தல இறைவனை மங்களநாதர் என்றும் அழைப்பார்கள். இறைவனின் திருநாமம் மங்களாம்பிகை என்பதாகும். ஒருமுறை கைலையில் சிவபெருமானும் அம்பிகையும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர் .

அம்பாள் வெற்றி பெறப் போகும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார். சிவனின் சூட்சுமம் அம்பிகைக்கு புரியாததால் அவரை பல இடங்களில் தேடினாள். எங்கும் காணாததால் இவ் ஊருக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி அதிலிருந்து ஒரு பிடி ஈரமண் எடுத்து சிவலிங்கமாக பிடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டாள். அப்போது ஈசன் அம்பிகையின் முன்பாக தோன்றினார். மனைவியின் மனம் மகிழ்வதற்காகவும், குடும்பம் மங்களகரமாக இருப்பதற்காகவும், கணவனிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வரவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவும் விளையாட்டில் தான் வேண்டும் என்றே தோற்றதாக கூறிய சிவபெருமான் உன்னால் இங்கு ஒரு திவ்ய ஆலயம் உருவாக வேண்டும் என்பதற்காகவே சூட்சமமாக இங்கே வந்தேன் என்றும் தெரிவித்தார்.

மங்களாம்பிகை ஆன அம்பாள் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் இவ்வாளய தீர்த்தம் மங்கள தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கைப்பிடி மண்ணில் சிவலிங்கம் உருவாக்கப்பட்டதால் இவ்வூருக்கு சிறுபிடி என்று பெயர் உண்டானது. அதுவே மருகி தற்போது சிறுகுடி என்று விளங்குகிறது. இத்தல இறைவன் மணலால் ஆனவர் என்பதால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. நவகிரகங்களில் மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட்டு சாபம் நீங்க பெற்றார்.

இதனால் இத்தல இறைவன் மங்கள நாதர் என்றும் இறைவி மங்களாம்பிகை என்றும் பெயர் பெற்றனர் .இத்தல இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கிரகதோஷமும் விலகும். குறிப்பாக அங்காரகனால் உண்டாகும் தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் குடும்பத்தில் அமைதியும் மங்களமும் என்றும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. அங்காரகன் தன் சாபம் நீங்க பெற்ற ஆலயம் என்பதால் இங்கு அங்காரக தோஷம் உள்ளவர்கள் வழிபடுகின்றனர் .அங்காரகனை தரிசனம் செய்ய மாசி மாதம் செவ்வாய்க்கிழமை ஏற்றது. இந்த நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். கும்பகோணத்தில் இருந்து பேரளம் செல்லும் சாலையில் கற்கத்தி என்ற இடம் உள்ளது. இங்கிருந்து தெற்கில் 5 கிலோ மீட்டர் தொலைவிலும் திருப்பாம்புரத்திலிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் மயிலாடுதுறையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் இவ்வாலயம் இருக்கிறது.

Tags:    

Similar News