பெண் வடிவில் பெருமாள் வந்து ஈசனை வழிபட்ட திருப்பெருவேளூர் திருத்தலம்!
மோகினி வடிவத்தில் இருந்த பெருமாள் தன் சுய ரூபத்தை அடைய இத்தல இறைவனை வழிபட்டதாக கூறுகிறது தல புராணம். இவ்வாலயத்தின் சிறப்பு பற்றி காண்போம்.
மேருமலையின் சிகரம் மூன்றாகப் பிளந்து விழுந்தது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள தலம் பெருவேளூர் எனும் தொன்மைப் பெயர் கொண்ட இவ்வூர் இன்று அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது . இதே மாவட்டத்தில் வேறொரு அய்யம்பேட்டை இருப்பதால் இவ்வூரை மணக்கால் அய்யம்பேட்டை என்று அழைக்கின்றனர். திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் இருவராலும் பாடப்பெற்ற பழம்பதி. சூரனை சம்ஹாரம் செய்த பின் அந்த தோஷம் நீங்குவதற்காக முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட சில தலங்களுக்குச் சென்றார்.
திருச்செந்தூரில் இருந்து கீழ்வேளூர் திருமுருகன்பூண்டி ,வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் இத்தலமாகிய திருப்பெருவேளூர் ஆகியன அத்தகைய தலங்கள். இவ்வாலயத்து இறைவன் சுயம்புவானவர். இத்தலத்த முருகனை அருணகிரிநாதரும் பாடியுள்ளார். ஆலயத்தின் பின்புறம் உள்ள தீர்த்தம் சரவணப் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி நடந்ததாம். அப்போது மேருமலையின் சிகரம் மூன்றாகப் பிளந்து விழுந்தது . அதில் ஒன்று இந்த தலத்தில் விழுந்தது. அதுவே காலப்போக்கில் சுயம்புலிங்கமாக வெளிப்பட்டதாம். இந்த ஐதீகத்தின் காரணமாக இத்தல இறைவனை வழிபட்டால் கயிலை மலையை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி கனகம்பீரமாக நிற்கிறது.
கோயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தால் தரைத்தளத்தில் பலிபீடம், வானளாவி நிற்கும் கொடிமரம், அடுத்து நந்தியம் பெருமான் வீற்றிருக்கும் நந்தி மண்டபம். நந்தியம்பெருமானை வணங்கிவிட்டு நிமிர்ந்தால் எதிரே இடதுபுறம் உள்ள வாசல் வழியே 18 படிகள். படியேறி கோயிலுக்குள் நுழைகிறோம். எதிரே சோமாஸ்கந்த முகூர்த்தம். அவரை வணங்கி வலது புறம் உள்ள வாசல் வழியே நுழைந்தால் மகா மண்டபத்தில் தெற்கு பார்த்த நடராஜர் சிவகாமி அம்மையுடன் அருள் தோற்றம் அளிக்கிறார் .கருவறை கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்புலிங்கமாக அபிமுக்தீஸ்வரர். சுயம்புலிங்க ரூபங்களுக்கே அலாதியான ஒரு வசீகர சக்தி இருப்பதை உணர முடியும். இந்த ஈசனும் அதை நம் உள் மனதுக்கு உணர்த்துகிறார் .