பக்தர்கள் கூட்டம் தைப்பூச நாளில் நிரம்பி வழியும் 'தண்ணீர் மலை முருகன்' !
மலேசியாவில் பினாங்கு மாநிலம் ஜார்ஜ் டவுன் பகுதியில் அருவி சாலை என்ற இடத்தில் உள்ளது பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.
மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக தைப்பூசம் நடைபெறும் முக்கியமான திருக்கோவிலாக இது இருக்கிறது. மேலும் உயர்ந்த கோபுரத்தைக் கொண்ட ஆலயங்களில் இந்தியாவிற்கு வெளியே அமைந்த பெரிய கோவிலாகவும் இந்த பால தண்டாயுதபாணி கோவில் திகழ்கிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருக்கும் இடம் என்ற வகையில் இந்த மலையின் மீதும் முருகன் ஆலயம் அமைந்திருக்கிறது. 1700 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தே இங்கே முருகன் கோவில் உள்ளது. சிறிய அளவிலான இந்த ஆலயம் இருந்த இடம் ஆனது பல நீரூற்று பகுதிகளின் அருகில் கட்டமைக்கப்பட்டிருந்தது .
இந்த நிலையில் 1850 ஆம் ஆண்டு இந்த இடத்தை நீர்த்தேக்கமாக மேம்படுத்த அப்போதைய ஆங்கிலேய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதே நேரம் அவர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்து வரும் பக்தர்களின் உணர்வுக்கும் மதிப்பளித்தனர். அதன்படி அருவி மலைப்பகுதியிலேயே பழைய ஆலயம் இருந்த இடத்திற்கு மேல் பகுதியில் முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்க சுமார் 11 ஏக்கர் நிலம் ஆங்கிலேய அதிகாரிகளால் ஒதுக்கப்பட்டது. பின்னர் அங்கே முருகனுக்கு ஒரு ஆலயம் அமைந்தது. ஆனால் தைப்பூசம் உள்ளிட்ட பல்வேறு முருகன் திருவிழாக்களின் போது அங்கே பக்தர்கள் நின்று தரிசனம் செய்வதற்கான வசதிகள் எதுவும் இல்லாததால் நெருக்கடி உருவானது.
எனவே ஆலயத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது . ஆனால் அதற்கான காலமும் நேரமும் கூடி வர பல ஆண்டுகள் கடந்து சென்றது. முடிவில் 2000 ஆண்டு பால தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தினர் தமிழ்நாட்டிற்கு வந்து காஞ்சி காமகோடி பீடாதிபதியை சந்தித்து ஆலோசனை செய்தனர். இந்தியாவைச் சேர்ந்த பல கட்டிட கலைஞர்கள் கைவினைக் கலைஞர்களைக் கொண்டு இந்த ஆலய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்ட இந்த ஆலயம் 2012 ஆம் ஆண்டு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. மலை உச்சியில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தை அடைவதற்கு 513 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். 21.6 மீட்டர் உயரம் உள்ள ஆலய கோபுரமானது இந்தியாவிற்கு வெளியே அமைந்த ஆலயங்களில் மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது.