சிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்!
எல்லையில்லா சக்திகளை தன்னகத்தே கொண்டு அருள் பாலிக்கும் அன்னை துர்கா தேவியின் ஆலயம் ஆஸ்திரேலியாவிலும் உள்ளது.அதைப் பற்றி ஒரு பார்வை.;
ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் அமைந்துள்ளது துர்க்கை அம்மன் ஆலயம். ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயம் துர்கா தேவஸ்தானம் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. 2002 ஆம் ஆண்டு இந்து சமயம் மற்றும் கலாச்சாரத்தை பரப்பவும் சிட்னியில் உள்ள இந்து மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் உதவுவதற்காகவும் துர்கா தேவஸ்தானம் நிறுவப்பட்டது. அவர்கள் தனியாக ஒரு இடத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவியரின் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்தனர்.
பின்னர் அந்த அமைப்பினர் சிட்னியில் ஒரு துர்க்கை அம்மன் ஆலயத்தை அமைக்க முடிவு செய்தனர். அதற்காக 2005 ஆம் ஆண்டு சிட்னியில் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை பாதுகாக்க டெபாசிட் செலுத்தினர். 2006 ஆம் ஆண்டு அங்கே துர்க்கை அம்மன் ஆலயம் அமைப்பதற்கான வேலைகளைத் தொடங்கினர். அங்கே தற்காலிக பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டதும் ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து பிரார்த்தனை மண்டபத்திற்கு முப்பெரும் தேவியரின் சிலைகள் மாற்றப்பட்டன.
இந்த ஆலயம் 2017 ஆம் ஆண்டு முழுமையாக கட்டப்பட்டு தெய்வத்திருமேனிகள் அவற்றிற்கான இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோவில் வளாகம் மூன்று நிலைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் திருமண மண்டபம் , கல்வி மண்டபம் உள்ளது. தரைத்தளத்தில் நுழைவு வாசல் மற்றும் பிரதான வாகன நிறுத்தும் இடம் உள்ளது. முதல் தளத்தில் துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் பிரதான தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள்.