ஒற்றைக்கல் சிவாலயம்- சிறப்பும் அமைவிடமும்!
மகாராஷ்டிரா மாநிலம் எல்லோராவில் அமைந்துள்ள குகை கோவில்கள் எப்போதும் சிறப்புக்குரியவை.இங்கே ஒற்றைக் கல்லால் ஆன சிவாலயம் ஒன்று காணப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் எல்லோராவில் அமைந்துள்ள குகைக் கோவில்கள் எப்போதும் சிறப்புக்குரியவை. ராஷ்டிரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக்காலத்தில் இவை உருவாக்கப்பட்டன. இங்கே உள்ள கைலாசநாதர் கோவில் மலைத்தளி வகையைச் சேர்ந்தது. திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும் ராஷ்டிரகூடர் கலைப்பாணியின் அம்சங்களையும் ஒருங்கேக் கொண்டு விளங்குகிறது .மாமல்லபுரத்து மலைத்தளிகளைப் போல் அல்லாமல் முழுமையான ஆலயம் ஒன்றின் அம்சத்தை கொண்டு பிரம்மாண்டமாக திகழ்கிறது.
இது ஒற்றைக் கல் கோவில் வகையைச் சேர்ந்தது. சிவனின் இருப்பிடமான கைலாயத்தை போன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆலயங்கள் கீழிருந்து மேல் நோக்கி எழுப்பப்படும் .ஆனால் இந்த மலைக்கோவிலானது மலை உச்சியில் இருந்து தொடங்கி செங்குத்தாக குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றைக்கல் ஆலயத்தை உருவாக்க பல நூறு ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் 4 லட்சம் எடையுள்ள பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த மலையை செதுக்க மூன்று விதமான உளிகளைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதுகின்றனர். 250 அடி நீளமும் ,150 அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் 148 அடி நீளமும் 62 அடி அகலமும் 100 அடி உயரமும் கொண்டது.