சண்டிகேஸ்வரர் சன்னதியில் கைத்தட்டி, சொடக்கு போட்டு வணங்குவது முறையா?

சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியில் கைத்தட்டி வணங்கும் முறையை மக்கள் பின்பற்றுவது சரியா ?எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றி காண்போம்.

Update: 2024-07-20 17:47 GMT

சிவாலயங்களில் சிவனை வழிபட்டு பிரகாரம் சுற்றி வரும்போது இடதுபுறம் சண்டிகேஸ்வரர் சன்னதி அமைந்திருக்கும். சண்டிகேஸ்வரரை வணங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் சண்டிகேஸ்வரர் சன்னதியில் வேகமாக கைகளை தட்டி ஒலி எழுப்புவார்கள் அல்லது தங்களது ஆடையில் இருந்து சிறுநூலை பிரித்து சன்னதியில் போடுவார்கள். இது சரியா? பெரிய புராணத்தின்படி இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விசாரசர்மன். சிறுவயதில் மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்த இவர் சிவன் மீது அதிக பக்தி கொண்டவர்.

தனது மாடு மேய்க்கும் தொழிலுக்கு நடுவே மணலால் லிங்கம் செய்து வழிபட்டு வந்தார்.இவரது பக்தியை கண்ட மாடுகள் இவர் உருவாக்கிய மணல் லிங்கத்தின் மீது தானாகவே பாலை சுரந்து அபிஷேகம் செய்தனர். இதைத் தெரிந்து கொள்ள மாட்டின் உரிமையாளர் விசாரசர்மனின் தந்தையாரான எச்சதத்தனிடம் சென்று உங்கள் மகன் செய்யும் காரியத்தைப் பாருங்கள். அவனை மாடு மேய்க்க சொன்னால் அதை விட்டுவிட்டு மணலால் லிங்கம் செய்து அங்கேயே தன்னை மறந்து தியானம் செய்கிறான். மாடு தானாகவே பாலை பொழிகிறது. உடனடியாக இதை விசாரித்து அவனை கண்டியுங்கள் என்று புகார் செய்யவும், மறுநாள் எச்சதத்தன் மறைந்திருந்து பார்க்க,  மணல்லிங்கத்தின் முன் சிறுவன் தியானத்தில் இருக்க மாடுகள் தானாகவே பால் பொழிவதை கண்டு சினம் கொண்ட எச்சத்தன் அந்த மணல் லிங்கத்தை காலால் தகர்த்தார்.

இதைக் கண்டு சிவதியானத்திலிருந்து எழுந்த விசாரசர்மன் ஒரு குச்சியால் அவரது தந்தையின் காலில் அடிக்க அது கோடரியாக மாறி அவர்கள் தந்தையின் காலை காயப்படுத்தியது. அவரது பக்தியைக் கண்ட சிவபெருமான் நேரில் தோன்றி அவனது பக்தியை மெச்சி அவனது தந்தையின் காலில் ஏற்பட்ட காயத்தையும் சரிப்படுத்தினார் .மேலும் விசாரசர்மனை நோக்கி "இனி நீயே எனது சொத்துக்கள் ஆன சிவகணங்களை காவல் காக்க வேண்டும் .எனக்கு வரும் பூஜைகளும் மரியாதையும் உமக்கும் கிடைக்கும்" என்ற அற்புத வரத்தை அருளினார்.

அன்று முதல் சிவனின் சொத்துக்களான சிவகணங்களை காவல் காத்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் சண்டிகேஸ்வரர் .நாம் இறைவனிடம் வைக்கும் கோரிக்கைகளை சிவனிடம் இவரே கூறுவதாக ஒரு ஐதீகம்.ஆகவே நாம் சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும்போது ஓசை இன்றி கைகளை மூன்று முறை தட்டி நமது வருகையை அவரிடம் பதிவு செய்தால் போதும். அதை அவர் ஏற்று நமது கோரிக்கைகள் நிறைவேற சிவனிடம் சிபாரிசு செய்வார் என்பது நம்பிக்கை. இனி சண்டிகேஸ்வரர் சன்னதியில் ஆடைகளிலிருந்து நூலைப் பிரித்து போடுவது  கை தட்டுவது, சொடக்கு போடுவதை தவிர்ப்போம் .

Tags:    

Similar News