சிவனும் விஷ்ணுவும் இணைந்த ஆலயம்!
'ஹரிஹர லிங்கம்' என்று பெயர் பெற்ற லிங்கம் இருக்கும் சிவனும் விஷ்ணுவும் இணைந்த திருத்தலத்தைப் பற்றி காண்போம்.
இந்துக்களின் தெய்வங்களான சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பெரும்பாலும் தனித்தனியாகவே ஆலயங்கள் அமைந்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஒரு இடத்தில் சிவனும் விஷ்ணுவும் இணைந்த ஆலயம் ஒன்று உள்ளது .ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ளது 'லிங்கராஜா கோவில்'. கோவில் நகரம் என்று அழைக்கப்படும் புவனேஸ்வரில் அமைந்துள்ள பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று. சிவபெருமானுக்கு அமைந்த இந்த ஆலயம் இந்துக்களின் புனித யாத்திரை தலமாகவும் இருக்கிறது.
லிங்கங்களின் அரசர் என்ற பொருளில் லிங்க ராஜா கோவில் என்று ஆலயத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.இவ்வாலயம் 11-ஆம் நூற்றாண்டில் சந்திரகுல மன்னரான ஜஜதி கேசரி என்பவரால் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கான சான்று இல்லை .மிகப்பெரிய ஆலயமான இதன் விமானம் 55 மீட்டர் உயரத்துடன் திகழ்கிறது. 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தில் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்கள் சிற்பங்களுடன் 150க்கும் மேற்பட்ட சிறிய கோவில்கள் இருக்கின்றன.
லிங்கராஜர் கோவில் ஆனது கருவறை, வேள்வி மண்டபம் ,போக மண்டபம், நாட்டியசாலை என்று நான்கு பகுதிகளாக இருக்கிறது. கருவறையில் ஒரு பக்க கதவில் சூலமும் மற்றொரு கதவில் சக்கரமும் காணப்படுகிறது. கருவறையில் பிரம்மாண்டமாக உள்ள சிவலிங்கம் சுயம்புவாக உருவானது என்கிறார்கள். இந்த லிங்கத்தை ஹரிஹர லிங்கம் என்கிறார்கள். ஏனெனில் இந்த சிவலிங்கத்திற்குள் திருமாலும் உறைந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது .அதனால் தான் கருவறை கதவின் ஒரு பக்கம் சூலமும் மற்றொரு பக்கம் சக்கரமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பார்வதி, கார்த்திகேயன், விநாயகர் ஆகியோருக்கும் கோவில்கள் இருக்கின்றன. இங்குள்ள ஒட்டுமொத்த கோவிலையும் காண்பதற்காக கோவிலின் எல்லைப்புற சுவருக்கு அருகே ஓர் உயர்ந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது.