சொன்னதைக் கேட்கும் 'சொற்கேட்ட விநாயகர் ஆலயம்'!
மனிதனுக்கு எப்பொழுதுமே தான் சொல்வதைக் கேட்க ஒரு நபர் இருந்தால் மகிழ்ச்சி. அதுவே இறைவனாக இருந்தால் பேரானந்தம். அப்படி ஒரு இறைவன் தான் இந்த சொற்கேட்ட விநாயகர்.
மனிதனுக்கு எப்பொழுதுமே தான் சொல்வதைக் கேட்க ஒரு நபர் இருந்தால் மகிழ்ச்சி அடைவான். அது நம்பிக்கைக்குரிய நபராக இருந்தால் இன்னும் மகிழ்ச்சி. அதுவே நம்மை படைத்த கடவுளிடம் நாம் நினைப்பதை சொல்லலாம், அவரும் அதை காது கொடுத்து கேட்பார் என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் .அப்படி நாம் சொல்வதை எல்லாம் கேட்டு அதை நடத்தி தரும் விநாயகர் தான் சொற்கேட்ட விநாயகர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் கோட்டையூர், வேலங்குடியில் சிறிய ஆலயத்தில் இந்த விநாயகர் அருள் பாலிக்கிறார்.
முன்காலத்தில் குருந்த மர நிழலில் தரையில் அமர்ந்து நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாராம் இந்த விநாயகர். ஒருமுறை இந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் விநாயகர் அமர்ந்திருந்த இடத்தில் விளையாடினர். வெகு நேரம் விளையாடியதால் அவர்களுக்கு பசி ஏற்பட்டது. களைப்போடு விநாயகர் அருகில் அமர்ந்த சிறுவர்கள் விநாயகரின் தொந்தியை தடவி "எங்களுக்கு பசிக்குதையா .நீங்கள் மட்டும் சாப்பிட்டு விட்டீர்கள் போல ?"என்று அறியா பிள்ளைகளை போல கேட்டன. அவர்கள் கேட்ட சிறிது நேரத்திலேயே ஒரு குடும்பத்தினர் அங்கு வந்து அந்த விநாயகருக்கு பொங்கல், வடை, கொழுக்கட்டை என நைவேத்தியமாக படைத்துவிட்டு பின்னர் அந்த பிள்ளைகளுக்கும் வழங்கினாராம்.
அதன் பிறகு அந்த பிள்ளைகள் எது கேட்டாலும் அதனைக் காது கொடுத்து கேட்டு அந்த பிள்ளைகளுக்கு செய்து தருவாராம் அந்த பிள்ளையார். இப்படி பலமுறை நடந்திருக்கிறது. இது ஊர் முழுவதும் பரவியதால் இந்த விநாயகரின் மீதான நம்பிக்கை அதிகரித்து அவரை வழிபடும் கூட்டமும் பெருகியது என்றும் பக்தர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்கு தேவையானதை செய்து தரும் சக்தி படைத்தவராக இந்த விநாயகர் இருக்கிறார். இங்குள்ள சிறிய ஆலயத்தில் நாகர் மற்றும் முனீஸ்வரருடன் விநாயகரும் வீற்றிருக்கிறார். இவருக்கு பெரிய அளவிலான மேற்கூரையோ விமானமோ அமைக்கப்படவில்லை.