தொட்டகடவல்லி மகாலட்சுமி கோவில்!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது தொட்டகடவல்லி என்ற கிராமம். இங்கு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு லட்சுமிதேவி கோவில் உள்ளது.
கர்நாடகாவில் லட்சுமி தேவியை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். செல்வம் மற்றும் இன்பமான வாழ்வுக்கு அதிபதியாக இருப்பவர் லட்சுமி தேவி. தொட்டகடவல்லியில் உள்ள மகாலட்சுமி கோவில் கி.பி 1113- ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது .இந்த ஆலயத்தை ஹாசன் வியாபாரிகளான குல்லாஹானா ராஹூதா மற்றும் அவர் மனைவி சஹாஜ்தேவி ஆகியோர் கட்டியிருக்கிறார்கள். உயரமான மேடைகள் அமைந்தது போல் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயமானது, ஹொய்சாலா கட்டிடக்கலையின் ஆரம்பகால கோவில்களில் ஒன்றாகும்.
ஆலயத்தில் வெளிப்புறச் சுவர்களில் இந்து புராணம் ,மகாபாரதம், ராமாயண காட்சிகள் செதுக்கல்களாக இடம் பெற்றுள்ளன. முன்பகுதியில் தோட்டம் அமைத்து கோவிலை அழகுப்படுத்தி இருக்கிறார்கள். அதனைக் கடந்து சென்றால் சதுர முன் மண்டபம் உள்ளது. அதனை 16 அழகான தூண்கள் தாங்கியுள்ளன. அதைத் தாண்டி உள்ள கற்பகிரகத்தில் மூன்றடி உயரத்தில் நான்கு கரங்களுடன் லட்சுமிதேவி காட்சி தருகிறார். மேல் வலது கையில் சங்கு, மேல் இடது கையில் சக்கரம், கீழ் வலது கரத்தில் ஜபமாலை, கீழ் இடதுபுறம் தந்திரம் என கம்பீரத்தின் பிரதிநிதியாக கருணைபொங்கும் கண்களுடன் இந்த தாயார் வீற்றிருக்கிறார்.
கர்ப்ப கிரக நுழைவு வாசல் நல்ல அலங்காரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே இணைந்துள்ள ரங்க மண்டபத்தில் கிழக்கே லட்சுமியின் கருவறை, வடக்கே காளி சன்னதி , மேற்கில் துர்க்கை சன்னதி , தெற்கில் சிவன் சன்னதிகள் இருக்கின்றன. கோவிலின் வடகிழக்கில் பைரவர் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கோவிலில் மொத்தம் ஒன்பது விமானங்கள் உள்ளன. இவற்றில் எட்டு ஒரே பாணியில் அமைந்தவை. லட்சுமி தேவியின் கருவறை விமானம் மட்டும் மற்றவற்றிலிருந்து மாறுபட்டுள்ளது.