சகல செல்வங்களையும் வாரி வழங்கும் கருட பஞ்சமி!

ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி திதியை கருட பஞ்சமி என்று அழைப்பார்கள். ஒரு ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

Update: 2024-08-09 11:25 GMT

சகோதரிகளான கத்ருவும், வினதையும் காசியப முனிவரின் மனைவிகள். கத்ரு நாகர்களின் தாயாகவும் , அருணன், கருடன் ஆகிய பறவைகளுக்கு தாயாக வினதையும் விளங்கினர். ஒருமுறை கத்ரு,  வினதை இருவரும் வான்வெளியை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது வானத்தில் தேவலோ குதிரையான உச்சைஸ்வரஸ் தோன்றியது. அதன் நிறம் என்ன என்பதில் கத்ருவுக்கும் வினதைக்கும் வாக்குவாதம் எழுந்தது. வினதை அந்த குதிரை வெள்ளை நிறம் என்று பதிலளித்தாள்.ஆனால் கத்ருவோ இல்லை அந்த குதிரையில் கருப்பு நிறமும் இருக்கிறது என்றாள்.

இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்று முடிவானது. கத்ரு ஒரு சதி செய்தாள். அதன்படி குதிரையின் வெண்ணிறத்தை கருப்பு நிறமாக மாற்ற தன் மகனாகிய கார்கோடகன் என்ற கருநிற பாம்பின் உதவியை நாடினாள். அந்த நாகத்தை குதிரையின் வாலில் சுற்றிக்கொள்ளுமாறு பணித்தாள். அதன்படியே கார்கோடகன் விரைந்து சென்ற உச்சைஸ்வவரஸ் குதிரையின் வால் பகுதியில் போய் இருந்து கொண்டான். மறுநாள் வினதையை அழைத்துச் சென்று வானில் தோன்றிய அந்த குதிரையை காட்டி கத்ரு அதன் வாலில் கருப்பு நிறம் இருப்பதை காட்டி அவளை தன்னுடைய அடிமையாக்கி கொண்டாள்.

வினதையின் பிள்ளையான கருடனும் கத்ருவுக்கு அடிமையாகிப் போனது. ஒருமுறை கருடன் கத்ருவிடம் "என் தாய் விடுதலை பெற என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்குத் கத்ரு தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால் உன் தாய்க்கும் உனக்கும் விடுதலை கிடைக்கும் என்றாள். தன் தாய்க்காக தேவ லோகத்தில் இருக்கும் அமிர்தத்தை கைப்பற்ற சென்றார் கருடன் . அப்போது தேவர்களுடன் கருடனுக்கு போர் ஏற்பட்டது. கருடனின் சக்திக்கு முன்பு தேவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை .இந்திரன் வஜ்ராயுதத்துடன் போரிட வந்தான். அந்த ஆயுதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தன்னுடைய இறகில் ஒன்றை உதிர்த்தார் கருடன. இதனால் இந்திரன் மன அமைதி கொண்டான்.

அப்போது கருடன் என் தாயாரின் அடிமையை போக்கவே எனக்கு அமிர்தம் தேவை. நான் இதை கொண்டு போய் கத்ருவிடம் கொடுத்த பிறகு நீங்கள் மறுபடியும் இதை கொண்டு வந்து விடலாம் என்று கூறினார். அதற்கு இந்திரனும் அனுமதி அளித்தார் .கருடன் அமிர்தத்தை கொண்டுவந்து கத்ருவிடம் கொடுத்து தன் தாயை அடிமை தளையில் இருந்து விடுவித்தார் .அந்த அமிர்தம் தர்ப்பைப் புற்களின் மீது வைக்கப்பட்டது. அமிர்தத்தை சாப்பிட கத்ருவின் பிள்ளைகளான ஆயிரம் நாகங்களும் வந்தன. அவர்களை நீராடி விட்டு வந்து அமிர்தத்தை பருகும்படி கருடன் பணித்தார்.

அப்படி அவர்கள் நீராடச் சென்ற நேரத்தில் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை தேவலோகம் எடுத்துச் சென்றுவிட்டார். நீராடி விட்டு வந்த நாகர்கள் அனைவரும் அமிர்தகசத்தை காணாமல் திகைத்தனர். அமிர்த கலசம் வைக்கப்பட்டிருந்த தர்ப்பைப் புற்களின் மீது சில அமீரக துளிகள் சிதறி இருப்பதை கண்டனர். அதனை தங்களின் நாவால் சுவைத்தனர். அப்போது தர்ப்பை புல்வெட்டி அவர்களின் நாக்கு இரண்டானது. இப்படித்தான் நாகங்களுக்கு இரட்டை பிளவுள்ள நாக்கு வந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

கருட பஞ்சமி அன்று சுமங்கலி பெண்கள் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்துவிட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள் கொண்ட கோலங்கள் போட வேண்டும். நடுவில் ஒரு பலகை போட்டு அதன் மேல் வாழை இலையை விரித்து, பச்சரிசியை கொட்டி, அதன் மேல் நமது சக்திக்கு ஏற்றபடி வெள்ளி, தாமிரம் அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் உருவம் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும்.

பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கௌரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பத்து முடிச்சு உள்ள நோன்பு கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும் இவ்வாறு பெண்கள் பத்து ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் .கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி சகல விதமான செல்வங்களையும் அடைவர். இந்த பூஜை செய்வதால் நாக தோஷம் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

Tags:    

Similar News