வேண்டிய வரம் அளிப்பாள் வெண்ணெய் காளி!

இந்தியாவின் தொன்மையான பெண் தெய்வ வழிபாட்டில் சப்த மாதர்கள் முதன்மையாக விளங்குகின்றனர்.

Update: 2024-08-15 17:45 GMT

இந்தியாவின் தொன்மையான பெண் தெய்வ வழிபாட்டில் சப்தமார்கள் முதன்மையாக விளங்குகின்றனர். சிவபெருமான் வதம் செய்த போது அசுரனின் படைகளை அழிப்பதற்காக இந்த சப்தமாதர்களை தோற்றுவித்ததாக வராக புராணம் தெரிவிக்கின்றது. அதேபோல் பிரம்மதேவர் இவர்களை படைத்து தேவியின் படைக்கு அனுப்பியதாக கூர்ம அவதாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த சப்த மாதார்கள் எனப்படும் ஏழு பெயர்களும் அன்னை பராசக்தி கணங்களாகவும் காவல் தெய்வங்களாகவும் போற்றப்படுகின்றனர்.

அஷ்ட பைரவர்களின் தேவியர்களாகவும் அவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். நாட்டுப்புற வழக்கத்தில் குழந்தைகளை காக்கும் தெய்வங்களாகவும் போர் தெய்வங்களாகவும் ஊர் காவல் தெய்வங்களாகவும் இவர்கள் வணங்கப்படுகிறார்கள். பல்லவர், சேரர், சோழர், பாண்டியர்களின் காலங்களில் கிராமங்களை காக்கும் தெய்வங்களாக இவர்கள் போற்றி வணங்கப்பட்டனர். பயிர் தொழில் காத்தருளும் தெய்வமாகவும் இவர்கள் விளங்குகின்றனர்.

சங்க இலக்கியத்தில் ஏழு கற்புடைய பெண்களை போற்றி புகழ்ந்த குறிப்பு காணப்படுகிறது. சமணம், பௌத்தம் போன்ற சமயங்களிலும் சப்த மாதர் வழிபாடு இடம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்திலும் சப்தமார்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. லலிதா சகஸ்ரநாமத்திலும் லலிதோ  பாக்யானத்திலும் சப்தமாதர்கள் புகழப்பட்டு உள்ளனர். பழம்பெரும் சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தியின் எதிரே சப்தமாதர்கள் வைத்து வழிபடும் அமைப்பை இன்றும் காணமுடிகிறது. சிதம்பரத்தில் சாமுண்டியே தில்லை காளியாக விளங்குவதும், தில்லைவாழ் தீட்சிதர்களால் வணங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. சிவவராகி விஷ்ணுவராகி வழிபாடுகள் மைசூரில் சாமுண்டிக்காக மலை மீது தனி ஆலயம் அமைத்து சாமுண்டீஸ்வரி மலையாக போற்றப்படுவது இந்த தெய்வங்களின் பெருமைகளை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

திருவெண்ணைநல்லூர் திருத்தலத்தில் அன்னை பார்வதி தேவி மங்களாம்பிகையாக வெண்ணையால் கோட்டை அமைத்து இறைவனை வழிபட்டதால் வெண்ணெய் நல்லூர் என இத்தலம் பெயர் பெற்றது. இறைவன் நஞ்சுண்ட போது அந்த நஞ்சு இறைவனை வருத்தாமல் இருக்க அன்னை பார்வதி இத்தலத்தில் பசு வெண்ணையால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவில் இருந்து தவம் செய்தார். அன்னையின் தவத்தின் போது அசுரர்களால் தொல்லை ஏற்படாமல் இருக்க அன்னையின் துணை தெய்வங்களாக விளங்கும் சப்தமாதர்கள் காவல் புரிந்தனர். இந்த ஏழு பேரின் காவலில் வைஷ்ணவி காளி வடிவம் கொண்டு காவல் புரிந்ததாக காலம் காலமாக ஊர் மக்களால் நம்பப்படுகிறது. அவளையே வெண்ணெய் காளியாக போற்றி வருகின்றனர். சப்தமாதர்களின் திருக்கோவிலை ஆண்டாண்டு காலமாக ஊர் மக்கள் வெண்ணை காளி ஆலயமாக வணங்குகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் எனும் அருட்துரை நாதர் திருக்கோவிலின் கிழக்கு மாட வீதியில் இந்த ஆலயம் இருக்கிறது.

Tags:    

Similar News