பதவியோகம் தரும் மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர்!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற சின்ன கிராமத்தில் எழுந்தருளியுள்ளது, ஞான பார்வதி உடனாய சிவலோகநாதர் ஆலயம் பதவியோகம் தரும் இந்த ஆலயத்தை பற்றி இங்கே பார்க்கலாம்.

Update: 2024-08-16 16:30 GMT

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடுநாடு எனப்படும் இந்த பகுதியை வீரேந்திர சோழன் ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு கீழே நிறைய சிற்றரசர்கள் அந்தந்த பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர். ஒரு காலகட்டத்தில் வீரேந்திர சோழனின் அரசுக்கு கீழே இருந்த சிற்றரசுகள் அனைத்தும் போதிய வருவாய் இல்லாததால் அரசுக்கு வரி கட்ட முடியவில்லை. அப்பொழுது வீரேந்திர சோழன் அனைத்து சிற்றரசர்களையும் அழைத்து உடனடியாக வரி கட்ட வேண்டும், இல்லை என்றால் உங்கள் தேசத்தை எங்கள் வசமாக்கிக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த சிற்றரசர்கள் செய்வதறியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் வயதான சிவ பக்தர் ஒருவர் இந்தப் பகுதிக்கு வந்தார். அவர் எப்போதும் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பார். அவர் சிற்றரசர்கள் சிலரை சந்தித்து உடனடியாக இந்த இடத்தில் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்புங்கள். உங்களின் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீரும் என்றார்.இதை எடுத்து அந்த பகுதியில் சிற்றரசர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிவாலயத்தை அமைக்க முடிவு செய்தனர். இதற்கு உரிய இடத்தை தேர்வு செய்யும் வேலையைத் தொடங்கினார். அப்பொழுது ஒரு அசரீரி மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோவில் அமைக்கும் படி சொல்லியது.

அதன்படியே அந்த இடத்தில் கோவில் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். கோவில் வேலைகள் அனைத்தும் முடிந்து கும்பாபிஷேகம் செய்வதற்கான நாள் நெருங்கியது. அந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக சிற்றரசர்கள் அனைவரும் சென்று வீரேந்திர சோழனை அழைத்தனர். ஆனால் வீரேந்திர சோழனோ "எனக்குத் தர வேண்டிய வரியை செலுத்தாமல் அனைவரும் சேர்ந்து ஒரு கோவிலை கட்டி விட்டு அதன் கும்பாபிஷேக விழாவிற்கு என்னை அழைக்கவும் வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்?" என்று கோபம் கொண்டார்.

அதற்கு சிற்றரசர்கள் "மன்னா இந்த இடத்தில் ஒரு கோவிலை அமைத்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்று ஒரு முதியவர் கூறினார். சிவனின் விருப்பம் அது என்று அவர் கூறியதால் நாங்கள் சிவாலயத்தை கட்டினோம்" என்றனர். உடனே வீரேந்திர சோழன் அந்த முதியவரை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். ஆனால் அரண்மனை காவலர்கள் அந்த தேசம் முழுவதும் தேடிப் பார்த்து அந்த முதியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சிற்றரசர்கள் சொல்வது பொய்யாக இருக்குமோ என்று வீரேந்திரசோழன் கருதினார். அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. சிவனடியார் வேடத்தில் வந்து எனக்கான ஆலயத்தை அமைக்கும்படி சிற்றரசர்களிடம் சொன்னது நான் தான் என்று கூறியது .

அப்போதுதான் வீரேந்திர சோழனுக்கும் சிற்றரசர்களுக்கும் முதியவராக வந்தது சிவபெருமான் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து தன் தவறுக்கு வருந்திய வீரேந்திர சோழ மன்னன் இறைவனே இங்கு வந்து ஆலயம் அமைக்க சொல்லி இருப்பதை நினைத்து மகிழ்ந்தான். மேலும் அவன் சிற்றரசர்களைப் பார்த்து "நீங்கள் ஆளும் பகுதி இனி உங்களுடையது. அங்கே நீங்கள் சுதந்திரமாக செயல்படலாம், வரி செலுத்த வேண்டியது இல்லை" என்று கூறினார். மேலும் அனைத்து சிற்றரசர்களுக்கு வீரேந்திர சோழனை முடி சூட்டி வைத்ததுடன் கோவில் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்று மனம் மகிழ்ந்தான். விழுப்புரத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் விழுப்புரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேல்பட்டாம்பாக்கம். இந்த ஊரின் பேருந்து நிறுத்தம் அருகிலேயே சிவலோகநாதர் கோவில் இருக்கிறது.

Tags:    

Similar News