வாழ்வை வளமாக்கும் கிருஷ்ண ஜெயந்தி!
காக்கும் தெய்வம் என்று அழைக்கப்படுபவர் மகாவிஷ்ணு. அவரது அவதாரங்களில் முக்கியமானது கிருஷ்ணாவதாரம். அவர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம்.
வாசுதேவர் - தேவகி தம்பதியற்கு ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைச்சாலையில் பிறந்தவர் கிருஷ்ணர். ஆனால் அவர் வளர்ந்தது கோகுலத்தில் உள்ள நந்தகோபர் - யசோதா தம்பதியரிடம். தன்னுடைய மூன்று வயது வரை கோகுலத்திலும் மூன்று முதல் ஆறு வயது வரை பிருந்தாவனத்திலும் ஏழு வயதில் கோபியர் கூட்டத்திலும் எட்டு வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது காலங்கள் கழிந்தன.
இந்த காலகட்டங்களில் கிருஷ்ணர் பல அரக்கர்களை அழித்ததோடு பல அற்புதங்களை செய்து கோபியர்களையும் கோகுல வாசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பிறந்தது முதலே கிருஷ்ணரைக் கொள்ள ஏராளமான அரக்கர்களை அனுப்பிய கம்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக அவன் கிருஷ்ணரை மதுராவிற்கு அழைத்துக் கொன்று விட முடிவு செய்தான். அதன்படி நான் தனுர்யாகம் செய்யப் போகிறேன். அதற்கு வேண்டிய பொருட்கள் உடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வர சொல்லுங்கள் என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறி அனுப்பினான். அவரும் நந்தகோபரிடம் வந்து விஷயத்தை சொன்னார். இதை அடுத்து பலராமரும் கிருஷ்ணரும் மதுராவிற்கு புறப்பட்டு சென்றனர்.
ஆனால் அங்கு மல்யுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் கம்சன். கண்ணனை அழிப்பதற்காக சானூரன், முஷ்டிகன்,கூடன், சலன், போன்ற பலம் வாய்ந்த மல்லர்களை தயார் செய்து வைத்திருந்தான். அவர்களுடன் கிருஷ்ணரையும் பலராமரையும் யுத்தம் செய்யும்படி கம்சன் உத்தரவிட்டான். அப்போது கிருஷ்ணருக்கு பத்துக்கும் குறைவான வயது தான். ஆனால் கிருஷ்ணரும் பலராமரும் எந்த தயக்கமும் இன்றி மாமிச மலைபோல் இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்கள் அனைவரையும் கொன்றனர்.