எல்லையில்லா அருளை வழங்கும் எல்லையம்மன்!

கலியுகத்தில் மனிதர்கள் தேடி அலையும் மன நிம்மதியை தரக்கூடியவள் எல்லை அம்மன். தன்னை நாடி வந்ததால் எல்லையில்லா வரங்களை அள்ளிக் கொடுப்பவள் எல்லையம்மன் தஞ்சாவூரில் கோவில் கொண்டு அருளும் இந்த எல்லையம்மனைப் பற்றி இங்கே காண்போம்.;

Update: 2024-09-02 04:15 GMT

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. முனிவர் தினமும் சிவபூஜை செய்பவர். கணவரின் பூஜைக்காக ரேணுகாதேவி ஆற்றில் நீர் எடுத்து வருவது வழக்கம். இதற்காக அதிகாலை எழுந்து ஆற்றில் நீராடி மண்ணால் குடம் செய்து நீர் எடுத்து வருவாள். ஒரு நாள் நீர் எடுக்கச் சென்ற வேளையில் வான் வழியாக கந்தர்வன் ஒருவன் பறந்து சென்றான். அவனின் அழகிய முகம் நீரில் பிரதிபலித்தது. அதைப் பார்த்து மதி மயங்கி  ரேணுகாதேவி ஒரு நிமிடம் சலனப்பட்டாள். இதை அடுத்து ரேணுகா தேவியால் ஆற்று மணலில் குடம் செய்து நீர் எடுத்துச் செல்ல முடியவில்லை.

இதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்த ஜமதக்னி முனிவர் தன் மகன்களில் ஒருவரான பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டி வீசும் படி உத்தரவிட்டார். அதற்கு பரசுராமர் உங்களது உத்தரவை நிறைவேற்றுகிறேன். ஆனால் எனக்கு நீங்கள் ஒரு வரம் தர வேண்டும் என கேட்டார். தலையை வெட்டிவிட்டு வா. நீ கேட்கும் வரம் தருகிறேன் என்றார் ஜமதக்னி முனிவர். ஆற்றங்கரைக்குச் சென்ற பரசுராமர் தனது தாயின் திருவடிகளை வணங்கினார். தாயிடம் நடந்ததைக் கூறினார். உடனே கணவரின் உத்தரவுபடியே தனது தலையை வெட்ட பரசுராமருக்கு அனுமதி அளித்தாள் ரேணுகாதேவி.

ஊர் எல்லையில் உள்ள பலிபீடத்தில் வைத்து ரேணுகா தேவியின் தலை வெட்டப்பட்டது. உடல் வேறு தலைவராக பிரிந்தது. பின்னர் ஜமதக்கினி முனிவரிடம் சென்று பரசுராமர் "இறந்து போன தாய் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும்" என வரம் கேட்டா. இதை அடுத்து ஜமதக்னி முனிவர் தனது கையில் இருந்த கமண்டல நீரை பரசுராமரிடம் கொடுத்து "இந்த நீரை ரேணுகாதேவி மீது தெளித்திடு உடலும் தலையும் இணைந்து உன் தாய் உன்னுடன் வந்தால் மகிழ்ச்சி" என்று வரம் அளித்தார் .வரத்தைப் பெற்ற பரசுராமர் பலிபீடத்தில் கிடந்த தாயின் தலையையும் அதே இடத்தில் தண்டனை பெற்ற மற்றொரு பெண்ணின் உடலையும் தவறுதலாக இணைத்து கமண்டல நீரை தெளித்து விட்டார் .

இந்த தவறால் ரேணுகாதேவி பரசுராமருடன் செல்ல மறுத்து ஊர் எல்லையிலேயே எல்லையம்மன் ஆக நின்று விட்டார். இதனை அறிந்த ஜமதக்னி முனிவர் பரசுராமரிடம் உன் தாய் ரேணுகாதேவி இனி எல்லையில் எல்லையம்மன் ஆகவும் தலை வேறு உடல் வேறாக மாறியதால் மாரியம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுவாள். அவளை முழு மனதுடன் வந்து வணங்குபவர்களுக்கு திருமணத் தடை, கணவன் - மனைவி கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்சனை ஆகியவை நீங்கும். குழந்தை பேறு கிடைக்கும் என்று அருளியதாக வரலாறு கூறுகிறது. தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் தஞ்சையில் எல்லையம்மன் கோவில் இல்லாததை அறிந்தார் .உடனடியாக நான்கு ராஜ வீதிகளின் மையத்தில் எல்லையம்மனுக்கு கோவில் கட்டினார்.

இந்தக் கோவிலில் கி.பி.1803 ஆம் ஆண்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் பல்வேறு திருப்பணிகள் நடந்ததற்கான கல்வெட்டு உள்ளது. கோவில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. நுழைவு வாசலில் உள்ள ஐந்து படிக்கட்டுகளை கடந்து செல்பவர்களுக்கு பஞ்சமா பாதகங்கள் நீங்கிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நுழைவு வாசலில் வலதுபுறத்தில் விநாயகரும் இடதுபுறத்தில் முருகனும் நடுப்பகுதியில் அம்மனும் சுதை சிற்பங்களாக இருக்கின்றனர். இதனை அடுத்து இரண்டு அடுக்கு ராஜகோபுரம் உள்ளது. அதைக் கடந்து சென்றால் மராட்டிய மன்னர் காலத்தில் நிறுவப்பட்ட போத்துராஜா மற்றும் குந்தளா தேவி அம்மன் கற்சிலை உள்ளது. கருவறையில் ரேணுகாதேவி கருங்கல்லால் ஆன சிரசு  உருவமாகவும், அதன் பின்புறம் சுதை திரு மேனியாகவும் அழகுற எழுந்தருளி எல்லையம்மன் ஆக காட்சி கொடுக்கிறாள்.தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தெற்கு வீதி எல்லையம்மன் தெருவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. அம்மனின் பெயரிலேயே தெருவின் பெயர் அமைந்திருப்பது சிறப்பாகும். இந்த அம்மனை வழிபடுவோருக்கு நவகிரக தோஷம் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும்.மறுபிறவி நீங்கும் கேட்டவரம் கிடைக்கப்பெறும் என்கிறார்கள். இந்த அம்மனை தினமும் காலை 8:00 மணி முதல் பகல் 11 மணி வரையும் மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரையும் தரிசனம் செய்யலாம்.

Similar News