கோவிந்தா நாமத்தின் பெருமையும் மண் சட்டியும் தயிர் சாதமும்!
திருப்பதி முழுக்க 'கோவிந்தா' 'கோவிந்தா' என்ற நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த கோவிந்த நாமத்தின் மகிமையைப் பற்றி காண்போம்.
திருப்பதிக்கு வந்ததும் ஒவ்வொருவரின் காதல் பதிவது, அங்கு ஒலிக்கும் வெங்கடேச ஸ்தோத்திரம் தான். இதை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி. அந்தப் பாடலில் வரும் வரிகளில் ஒன்று 'விநா வெங்கடேசம் ந நாதோ ந நாத' என்பதாகும். இதற்கு 'உன்னை தவிர வேறு தெய்வம் இல்லை உன்னையே சரணடைகிறேன்' என்பது பொருள். இப்படி வேண்டி வழிபட்ட மார்க்கண்டேயருக்கு சீனிவாச பெருமாளின் அருள் காட்சி கிடைத்தது. இந்த துதியைச் சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையானின் அருள் முழுமையாகக் கிடைக்கும். ஏழுமலையானே மார்க்கண்டேய மகரிஷியிடம் இதைப் பற்றி சொல்லி இருக்கிறார்.
என்னை கோவிந்தா என்று ஒருமுறை அழைத்தால் நான் உனக்கு கடன் பட்டவன் ஆகிறேன், இரண்டாவது முறை 'கோவிந்தா' என்று அழைத்தால் அந்த கடனுக்கு வட்டி செலுத்துவேன். மூன்றாவதாக 'கோவிந்தா' என்று கூப்பிட்டால் அந்த வட்டிக்கு வட்டி தருவேன் என்று கூறியுள்ளார். அதனால்தான் திருமலை திருப்பதி முழுவதும் கோவிந்தா கோவிந்தா என்ற சரணகோஷம் எதிரொலிக்கிறது. ஏழுமலையான் குபேரனுக்கு மட்டுமே கடன் பட்டவராக இல்லாமல் தன்னுடைய நாமத்தை உச்சரிப்பவர்க்கும் கடன் பட்டவராக இருப்பது விசித்திரமான விஷயம்தான்.
திருமலை மடப்பள்ளியில் வெண்பொங்கல் , சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் ,புளியோதரை ,கேசரி பாத் , ஜீராபாயசம் , மோளா, ஹோரா, கதம்ப சாதம் ,பகாளாபாத், பருப்பு வடை, பானகம், அப்பம் ,ஜிலேபி ,மனோகரம், ஹோலிபூ ,தேன்குழல், கயாபடி, வட்டபடி, மாவு தோசை ,நெய் தோசை ,லட்டு ஆகிய நிவேதனங்களை தயாரிக்கின்றனர். மேலும் சித்ரான்னம்,வடை முறுக்கு அதிரசம் ,போளி, மௌகாரம் ,பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி போன்றவையும் பெரிய அளவில் தினமும் தயார் செய்யப்பட்டு ஏழுமலையானின் அடியார்களுக்கான பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.