அர்ஜுனனுக்கு சிவபெருமான் அஸ்திரம் வழங்கிய 'அஸ்திரபுரீஸ்வரர்'

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே அமைந்திருக்கிறது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிற்றூரான ஆனூர், இங்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட மிகப் பழமையான சவுந்தரநாயகி உடனாய அஸ்திரபூரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

Update: 2024-10-05 17:15 GMT

அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோவிலூக்கு பல்லவ மன்னனான கம்பவர்மன், பாத்தி வேந்தி ராதிவர்மன், முதலாம் ராஜராஜசோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜன் போன்ற பல மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகளை செய்திருக்கிறார்கள். இத்தலமானது கல்வெட்டு களஞ்சியமாக காட்சி தருகிறது. அனியூர், ஆதியூர் எனும் பல பெயர்களில் இவ்வூரின் பெயர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனூரின் வடகிழக்கு மூலையில் கிழக்கு திசை நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. கோவிலின் முன் தீர்த்த குளம் அமைந்துள்ளது.

மதில் சுவர் மற்றும் ராஜகோபுரம் இன்றி நுழைவு வாசல் மட்டும் இருக்கிறது. நுழைவு வாசலில் முன்பு திரிசூலம் பொறிக்கப்பட்டல்ல கல் துணைக் காண முடிகிறது .கோவிலுக்குள் நுழைந்ததும் நுழைவு வாசலின் இருபுறமும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரது சன்னதிகள் காணப்படுகின்றன. உள்ளே பலிபீடம் ,நந்தி மண்டபம் அமைந்துள்ளது. இத்தலம் முன் மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்போடு காட்சி தருகிறது. முன் மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி சௌந்தரநாயகி அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

கருவறையின் முன்பு புடைப்புச் சிற்ப நிலையில் துவார பாலகர்கள் அமைந்துள்ளனர். நுழைவு வாசலின் பக்கவாட்டு சுவரில் ருத்ராட்ச மாலைகளை அணிந்த சிவனடியாரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவத்தில் அமைந்த கருவறைக்குள் அஸ்திரபுரீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி சிவலிங்க வடிவில் சிவபெருமான் அருளாட்சி செய்து வருகிறார். சிவபெருமானிடம் இருந்து பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்காக அர்ஜுனன் தவம் இருந்த தலங்களில் ஒன்றாக இத்தலம் குறிப்பிடப்படுகிறது.

அர்ஜுனனுக்கு சிவபெருமான் அஸ்திரம் வழங்கிய தலம் இது என்பதால் இவ்வாலய இறைவன் அஸ்திர புரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். ஒருகால பூஜை நடைபெறும் இந்த ஆலயமானது தினமும் காலை 9 மணி முதல்  நண்பகல்11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். பிரதோஷ நாட்களில் மட்டும் மாலை வேலைகளில் கோவில் நடை திறந்திருக்கும். செங்கல்பட்டில் இருந்து பொன் விளைந்த களத்தூர் செல்லும் வழியில் ஆனூர் கிராமம் அமைந்துள்ளது.

Tags:    

Similar News