நினைத்ததை நிறைவேற்றும் வெண்ணைய்மலை முருகன்!
சிவனைப் போன்றே பன்னிரு திருமுறைகளும் 63 அடியார்களும் அமையப்பெற்ற மற்றொரு கடவுள் முருகன் மட்டுமே. அம்முருகனின் சிறப்பான தலம் பற்றி காண்போம் .
குறத்தி வள்ளியை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்ட கடவுள் தமிழில் அமைந்த இறைவனின் வரலாறு கூறும் புராணங்களிலேயே அளவில் பெரியது முருகன் மீதான கந்தபுராணம் மட்டுமே. ஓங்கார மந்திரத்தின் பொருளை தந்தை சிவனுக்கு உபதேசித்ததன் மூலம் நல்ல பிள்ளைகளின் நல்லுரைகளையும் பெற்றோர் எவ்வித பாரபட்சமும் இன்றி கேட்டுப் பயன் கொள்ள வேண்டும் என்ற புது நெறியை உலகிற்கு உணர்த்தியவர் முருகன். அத்தகைய முருகப்பெருமானின் மிகச்சிறந்த மலைத்தலங்களில் ஒன்று கரூரில் உள்ள வெண்ணைய்மலை பால சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
முன்னொரு காலத்தில் பிரம்மதேவனுக்கு தான் செய்யும் படைப்பு தொழிலின் காரணமாக கர்வம் உண்டானது. அவருக்கு பாடம்புகட்ட ஈசன் எண்ணினார். ஒரு கட்டத்தில் பிரம்மனால் படைக்கும் தொழிலை மேற்கொள்ள இயலாமல் போனது. பிழையை உணர்ந்த பிரம்மன் தன் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினார். வஞ்சிவனத்தில் தவம் ஏற்றும் படி பிரம்மனுக்கு ஈசன் அறிவுறுத்தினார். இந்நிலையில் படைக்கும் தொழிலை தேவலோக பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார். தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் பசி இல்லாமல் வாழ்வதற்காக காமதேனு பசுவானது வெண்ணையை மலை போன்று குவித்தது.
அதன் அருகிலேயே தேனு தீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது. இதனாலேயே வெயில் காலத்தில் இந்த மலை குளுமையாக இருப்பதாக சொல்கிறார்கள். பின்னாளில் இம்மலையில் யோகி பகவன் என்பவர் தியானத்தில் மூழ்கி இருந்தார்.அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து எமது அருள் இந்த வெண்ணைய்மலையில் உள்ளதாக அனைவரும் அறிய செய் என்று கட்டளையிட்டார். யோகி பகவன் இது குறித்து கருவூர் அரசனிடம் தெரிவித்தார். மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம் மண்டபம் அமைத்து முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார்.