நாக பயம் அகற்றும் நிலக்கல் மகாதேவர்!

நாகபயம் மற்றும் நாக தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தலமாக நிலக்கல் மகாதேவர் ஆலயம் உள்ளது.

Update: 2023-12-01 15:08 GMT

ஆய் மன்னர்கள் , வேனாடு மன்னர்கள் ஆட்சி செய்த பூமி. யானை தந்தம்,மிளகு இஞ்சி, ஏற்றுமதிக்கான வணிகத்தலமாக விளங்கிய ஊர். கருவறை சுற்றி உயிரோட்டமான நாகங்கள் கொண்ட கோவில். நாகதோஷங்கள் நீக்கும் இறைவன். சபரிமலை வாகனங்கள் இளைப்பாருமிடம். பத்தனம்திட்டா மாவட்டத்தின் பழம்பெரும் ஆலயம் என பல பெருமைகள் கொண்ட தலம் நிலக்கல் ஆகும். இங்க மகாதேவர் ஆலயம் என்ற பெயரில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது.


சுவாமி ஐயப்பன் வழிபட்ட தலமாக இது விளங்குவதால் இப்பகுதி 'இடத்தாவளம்' என்று அழைக்கப்படுகின்றது. நிலக்கல் தொன்மையான வரலாற்று பின்னணி கொண்ட தலமாகும். யானை தந்தம், இலவங்கம், மிளகு ,இஞ்சி போன்ற பொருள்கள் நிலக்கல் வரும் மனிதர்கள் மூலமாக கொடுங்கலூர், புறக்காடு போன்ற துறைமுக நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடையேழு மன்னர்களில் ஒருவனான ஆய் மன்னனின் ஆற்றின் கீழே இருந்து பின்னாளில் வேனாடு மன்னர்களால் ஆளப்பட்ட பகுதி இது என வரலாறு கூறுகிறது.


இன்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லும் இடமாக இது விளங்குகிறது. இவ்வாறு பிரதான சன்னதியாக சிவபெருமான் விளங்குகின்றார். இவரின் எதிரில் நந்தி தேவரும் கன்னிமூல கணபதியும் அமைந்துள்ளனர். இக்கோவிலின் இடதுபுறம் பள்ளியறை காவு தேவி சன்னதி அமைந்துள்ளது .கருங்கல் கருவறையில் இரண்டு அடுக்குகளாக ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மகாதேவர் கருவறை முழுவதுமே கருங்கல் திருப்பணியாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் வாசலிலும் மாடியில் உள்ள வாசல்களிலும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர்.


கருவறையில் எட்டு திசைகளிலும் நாகங்கள் கலைநயத்தோடு புடைப்பு சிற்பங்களாக உயிரோட்டத்தோடு அமைந்துள்ளன. நாகதோஷம் நீக்கும் தளமாக கூறப்பட்டாலும் வனப்பகுதியில் உள்ள மக்கள் நாகத்தை வணங்கி வழிபட்டதை உணர்த்துவதாக இது உள்ளது. கருவறை கூரை செந்நிற தகடுகளால் வேயப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பபத்தனம்திட்டா மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடமே நிலக்கல் ஆகும். நிலக்கல்லில் இருந்து பம்பா 17 கிலோமீட்டர் தூரத்திலும் சபரிமலை ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. ஐயப்பனை தரிசிப்பதற்கு முன் நிலக்கல் மகாதேவரை வணங்கி செல்வது இன்றும் மரபாக உள்ளது. நாகபய மற்றும் நாக தோஷம் உள்ளவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக நிலக்கல் மகாதேவர் விளங்குகின்றார்.

Similar News