தீராத நோய்களைத் தீர்க்கும் நெய்யாற்றங்கரை கிருஷ்ணர்!

தன்னை மரத்தில் மறைத்து வைத்து உயிரைக் காத்த கிருஷ்ணனுக்கு மன்னன் மார்த்தாண்டவர்மா அமைத்த ஆலயம் புனிதமிக்க அம்மாச்சிபிலா மரம் உள்ள கோவில் நொய்யாற்றங்கரையில் அமைந்த சிறப்புமிக்க தலம் நெய்யாற்றங்கரை கிருஷ்ணசாமி கோவில்.

Update: 2024-03-27 04:36 GMT

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் முடிசூட்டும் தகுதி அந்த மன்னனின் சகோதரியின் வாரிசுகளுக்கே வழங்கப்படும். மன்னரின் வாரிசுகளுக்கு உரிமை இல்லை. மன்னர் அனுஷம் திருநாள் காலத்தில் யுவராஜாவாக இருந்தவர் மார்த்தாண்ட வர்மா. அப்போது மன்னர் குடும்பத்தில் குழப்ப சூழ்நிலை இருந்தது .அதே நேரம் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு பகைவர்களாக விளங்கிய எட்டு வீட்டு பிள்ளைமார்கள் யுவராஜனை கொல்ல திட்டமிட்டனர் .இதனால் யுவராஜா மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மாறுவேடத்தில் வெளியில் செல்ல வேண்டியிருந்தது.

ஒரு சமயம் நெய்யாற்றங்கரை பகுதிக்கு வந்தபோது பகைவர்கள் கொடிய ஆயுதங்களோடு இவரைப் பின்தொடர்ந்தனர். யுவராஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் நிலையை உணர்ந்து அருகில் இருந்த பலாமரத்தின் பொந்தில் யுவராஜாவை மறைந்து கொள்ளச் சொன்னான். யுவராஜாவும் மறைந்து கொண்டார். பகைவர்கள் அந்த இடம் வந்ததும் சிறுவனை விசாரித்தனர். சிறுவன் வேறு திசையை காட்டி மன்னரைக் காத்தான்.

மன்னரை உயிர் பிழைக்க வைத்த அந்த மரத்தை 'அம்மச்சிபிலா' என்று அழைத்தனர். யுவராஜனாக இருந்த மார்த்தாண்டவர்மா பல தடைகளைக் கடந்து மன்னனாக முடி சூட்டிக் கொண்டார் .ஆனால் அவருக்கு தன்னை காத்த மரமும் சிறுவனும் மறந்து போயினர். இதற்கிடையில் மன்னன் மார்த்தாண்டவர்மார் தன் எதிரிகள் எட்டு வீட்டு பிள்ளைமார்கள் வம்சத்தை பூண்டோடு அழித்தார் .

ஒருநாள் கனவில் தோன்றிய கிருஷ்ணர் 'அன்று மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து உன் உயிர் காத்தது நான் தான் என்னை மறந்து விட்டாயே! இனியும் தாமதிக்காமல் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பு' என்றார் .தன் தவவறை உணர்ந்த மன்னர் தன் உயிர் காத்த அந்த மரத்தையே ஆதாரமாக வைத்து ஆலயம் எழுப்ப தீர்மானித்தார். அருகே உள்ள ஒரு ஊரில் சிலை உருவாக்கப்பட்டது. கல்லால் உருவான அந்த கிருஷ்ணன் சிலையை ஊரிலிருந்து படகில் ஏற்றி வந்தனர். ஆனால் அச்சிலையோ ஆலயம்வர விரும்பாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது.

பிரசன்னம் பார்த்தபோது 'ஐம்பொன் சிலையே' வேண்டுமென உத்தரவு வந்தது. அதன்படியே ஒன்றரை அடி உயர ஐம்பொன் சிலை வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அச்சிலை மன்னரின் கனவில் கிருஷ்ணர் தோன்றிய வடிவில் அமைக்கப்பட்டது. இவரே இன்று நெய்யாற்றங்கரை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி என அழைக்கப்படுகிறார். கிபி 1755 ஆம் ஆண்டில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னரை காத்திருந்த பலா மரமும் புனித மரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தினமும் அதிகாலை 4 மணி முதல் காலை 11:00 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் 10 நாட்கள் ப்ரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவனந்தபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். இங்கு செல்ல கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.

Similar News