இவ்வாறு தானம் வழங்கினால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.!

இவ்வாறு தானம் வழங்கினால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.!

Update: 2020-12-11 05:45 GMT

தானம் என்பது தர்மத்திற்கு இணையானதாக சொல்லப்பட்டது. தானத்தில் எந்த வகை தானமாக இருந்தாலும், கல்வி தானம், செல்வம், அன்னதானம், வஸ்தர தானம், என எதுவாக இருந்தாலும் தானம் என்பது நல்ல அறம். இது நல்ல கர்மாவையே ஒருவருக்கு ஏற்படுத்தும். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று தானம் என்பது நியூட்டனின் விதிக்கு இணையானது என்கின்றனர்.

அதாவது, நாம் செய்யும் செயலுக்கு இணையான வினையிருக்கும் என்பது போன்ற பொருளில் ஒப்பிடுகின்றனர். இன்னும் சிலர் இரைக்கின்ற கேணியே ஊறும் என்ற பழமொழிக்கு ஏற்ப, எவ்வளவு தானம் வழங்குகிறோமோ, அதைவிட அதிகமானவற்றை திரும்ப பெறுகிறோம் என்கின்றனர். எது எப்படியாயினம், எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் அளிக்கின்ற தானமே சிறந்த தானமாகும்.

இதில் எந்த மாதிரியான தானங்கள் செய்தால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்று சொல்லபட்டுள்ளது. உதாரணமாக, நெல்மணிகள், நீர், வஸ்திரம், பசுவுக்கு உணவளித்தல் போன்ற தானங்களை செய்தால், எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். அது மட்டுமின்றி நம்முடைய இறுதி காலம் மிகுந்த இயல்பானதாக, எந்தவித வலியும் குறைபாடுமின்றி நிகழும் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும், தானம் செய்யும் நபர் தன் வீட்டில் தன்னுடைய குடும்பத்திலிருக்கும் தாய், தந்தை, மகன், மகள், மனைவி அல்லது கணவன் போன்றோரை காயப்படுத்தாதவராக இருக்க வேண்டியது அவசியம். வீட்டிலிருப்போரை காயப்படுத்தி, வெளியே வெறும் பெயரளவில் தானம் செய்தால் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி தானம் என்பது தேவை இருக்கும் இடத்தை தேடி கண்டடைந்து வழங்கப்பட வேண்டும். அவ்வாறாக இல்லாமல், இல்லாதவர்களை நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து கொடுப்பது சிறந்த வழக்கம் அல்ல.

தானம் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் யாதெனில், பசு, நோயாளி மற்றும் அந்தணருக்கு தானம் கொடுக்கும் ஒருவரை எக்காரணம் கொண்டும் யாரும் தடுக்க கூடாது. அது தீராத பாவமாக மாறும் மற்றும் கொடிய சாபத்தினை பெற்றுதரும்.

நடைமுறையில் சிரமம் எனினும், முடிந்தளவு அரிசி, எள்ளு போன்றவற்றை பாத்திரத்தில் வைத்து தருவதை விடவும், கைகளால் தானம் வழங்குங்கள். மேலும் கிழக்கு புறமாக நின்று தானம் தருவது சிறந்த பலனை அளிக்கும். நாமளிக்கும் தானம், நமக்கு நன்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பின்றி, நம்மிடம் இருந்து பெறுவருக்கு நன்மையை நல்க வேண்டும் என்கிற  சிந்தனை மேலோங்கியிருத்தலே சிறந்த முறையாகும்.

Similar News