பஞ்சம் போக்கும் பத்மநாபா ஏகாதசி!
புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு பத்மநாபா ஏகாதசி என்று பெயர்.
முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தைச் சேர்ந்த மன்னனான மாந்தாதா என்பவர் தர்மம் தவறாமல் ஆட்சி செலுத்தி வந்தார். அவரின் அரசாட்சியில் குடிமக்கள் அனைவரும் உணவு, உடை, பொருளுக்கு பஞ்சம் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் ஒருமுறை அவரது நாட்டில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழையே பெய்யவில்லை. பஞ்சமும் மூன்று வருடங்களுக்கு தொடர்ந்த காரணத்தால் விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் அனைவரும் உணவு கிடைக்காமல் தவித்தனர்.
இதை அடுத்து மண்ணனிடம் நேரில் சென்று வருகின்றனர். மக்களின் நிலை கண்டு மன்னன் மிகவும் மனம் வருந்தினான். மக்களின் பஞ்சம் போக்க என்ன செய்வது என்று அறியாமல் திணறினார். தான் எந்த தவறும் செய்யாத பட்சத்தில் தன் நாட்டு மக்களுக்கு இவ்வளவு பெரிய துன்பம் விளைந்தது ஏன் என்று புரியாமல் தவித்தார். இது பற்றி அறிவதற்காக காடுகளில் தவம் செய்து வரும் சாதுக்களை காண்பதற்காக மன்னன் தன்னுடைய சேனைகளுடன் காடு காடாக திரிந்தான்.
அப்போது அவருக்கு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ஆங்கிரச முனிவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் தன் நாட்டு மக்களின் நிலையைச் சொல்லி தங்களின் துயரம் நீங்க வழி கேட்டார். அவர் புரட்டாசி வளர்பிறையில் வரும் பத்மநாப ஏகாதசியை மக்களும் மன்னனும் கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படியே தன்னுடைய நாடு திரும்பிய மன்னன் மக்கள் அனைவரையும் பத்மநாபா ஏகாதசியை கடைபிடிக்க வலியுறுத்தியதுடன் தானும் விரதத்தை அனுஷ்டித்தார் .