பாவ வினை தீர்க்கும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்!
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில்.
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவேதான் இந்த ஊர் பாரியூர் என பெயர் பெற்றதாம். கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என அழைக்கப்பட்டது. இந்த ஊரைச் சேர்ந்தவர் கோபிசெட்டிபிள்ளான் இவரை வள்ளலாக மக்கள் போற்றுகின்றனர் . இவரின் பெயரால்தான் கோபிசெட்டிபாளையம் என்ற பெயர் வந்தது காளி அம்மனின் பக்தர்.
ஒருமுறை அவரிடம் புலவர் ஒருவர் வந்து சில பொருட்களை கேட்டார் . அப்போது வேண்டிய பொருளை வழங்கும் நிலையில் அவர் இல்லை. இதனால் மனம் விரும்பிய கோபிச்செட்டி பிள்ளான் தன் உயிரை மாய்த்துக்கொள்ள பாரியூர் பகுதியில் உள்ள புலி வசிக்கும் புதர்க்குச் சென்றார். காளியம்மனை தன் மனதில் நினைத்துக் கொண்டு புலியை எதிர்நோக்கி காத்திருந்தார்.ஆனால் புலி வரவில்லை அதற்கு பதிலாக அம்மன் அருளால் அங்கே ஒரு பொற்குவியல் அவர் கண்ணில் பட்டது. தனது வள்ளல் தன்மை காக்கப்பட வேண்டும் என்று எண்ணி காளியம்மன் தான் இந்த பொற்குவியலை அளித்திருப்பதாக அவர் நினைத்தார் .
உடனே அந்த பொற்குவியலை எடுத்துச் சென்று புலவருக்கு மற்றவர்களுக்கும் வழங்கினார் என்று சொல்லப்படுகிறது. காலப்போக்கில் இந்த ஆலயம் சிதலமடைந்த போனது. இந்த கோவிலை கற்கோவிலாக மாற்ற வேண்டும் என்று விரும்பிய கோபி புதுப்பாளையத்தை சேர்ந்த பி எஸ் முத்து வேலப்பன் திருப்பணி குழு தலைவராக இருந்து கோவில் திருப்பணி செய்தார். மிகச் சிறப்பான சிற்பங்களுடன் உருவான இந்த ஆலயத்திற்கு 20.04.1942 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது . கோவில் வளாகம் நீண்ட சதுர வடிவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சென்றதும் நம்மை ராஜகோபுரம் வரவேற்கிறது. இந்த கோபுரம் 90 அடி உயரமும் 40 அடி அகலமும் உடையது.
ராஜகோபுரத்தின் வழியே உள்ளே சென்றதும் விநாயகரை தரிசிக்கலாம். பின்னர் குதிரை வாகனமும் அதனை ஒட்டி பிரம்மாண்ட வடிவத்தில் முனியப்ப சாமியும் காட்சி தருகிறார்கள். முனியப்பனை வழிபடுபவர்கள் பில்லி, சூனியம், பேய், பிசாசு தொல்லைகளில் இருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை. கோவிலின் மையத்தில் அம்மன் கற்கோவில் மண்டபம் உள்ளது. இதன் உள்பகுதியில் கருங்கல்லால் ஆன அழகிய கர்ப்ப கிரகத்தில் கொண்டத்து காளியம்மன் அருள் பாலிக்கிறார். இந்த மண்டபம் 28 தூண்களால் ஆனது. இதில் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.