ஒரே மாதத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.25 கோடி காணிக்கை செலுத்திய மக்கள்!
அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் 25 கோடி காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடந்தது. கோவிலின் கருவறையில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனவரி 23-ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நாள்தோறும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை மற்றும் நன்கொடைகளை வாரி வழங்குகின்றனர்.
கோவில் கருவறை பகுதியில் நான்கு காணிக்கை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் ரொக்கமாக, காசோலையாக தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களாக தங்களின் காணிக்கையை செலுத்துகின்றனர் .இது தவிர ஆன்லைன் மூலமாகவும் கோவில் அறக்கட்டளையின் வங்கி கணக்குகளுக்கு பக்தர்கள் காணிக்கைகளை அனுப்புகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் 25 கோடி காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது . இதில் 25 கிலோ எடையிலான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களும் அடங்கும்.
இதுகுறித்து கோவில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில் , "ஜனவரி 23ஆம் தேதி முதல் தற்போது வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். ரொக்கம், காசோலை, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் என ரூபாய் 25 கோடி காணிக்கை கிடைத்துள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் வரும் ராமநவமி பண்டிகை நாட்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். எனவே காணிக்கைகள் பல மடங்கு அதிகரிக்கும் என்று கோவில் அறக்கட்டளை எதிர்பார்க்கிறது" என்றார்.
SOURCE :DAILY THANTHI