பொறுமையே வாழ்க்கை என்பதை மனிதர்களுக்கு எடுத்துரைத்த பூரி ஜெகந்நாதர் ஆலயம்!
பொறுமையின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்துரைத்த பூரி ஜெகந்நாதர் ஆலயம் தோன்றிய வரலாறு பற்றி காண்போம்.;
இந்தியாவின் நான்கு புனிதமான புண்ணிய தளங்களில் பூரி ஜெகந்நாதர் ஆலயம் ஒன்று. மற்றவை துவாரகை, பத்ரிநாத் , ராமேஸ்வரம் ஆகும்.பூரியை ஆட்சி செய்த இந்திர தையுமா என்ற மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள் தனக்கு ஒரு கோவில் கட்டுமாறு கூறினார். கடலில் மிதந்து வரும் பொருளை கொண்டு சிலையை செதுக்குமாறு அறிவுறுத்தினார்.
இதை அடுத்து கடலில் மிதந்து வந்த ஒரு பெரிய மரக்கட்டையில் இறைவனின் சிலையை செதுக்க மன்னன் முடிவெடுத்தான்.அதற்காக ஒரு தச்சர் வரவழைக்கப்பட்டார். ஆனால் அந்த மரத்தை செதுக்க முற்பட்டபோது உளியே உடைந்து போனது. அப்போது முதிய தச்சர் வடிவில் பெருமாள் தோன்றி தானே மரத்தில் சிலை செய்து தருவதாகவும் 21 நாட்களுக்கு நான் சிலை செய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார்.
முதல் 15 நாட்கள் தச்சர் அறையிலிருந்து மரத்தை செதுக்கும் சத்தம் கேட்டது. அதனால் மன்னன் உள்ளே செல்லவில்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு எந்த சத்தமும் கேட்காததால் தச்சர் தூங்கிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் மன்னன் கதவை திறந்து உள்ளே சென்றான். அப்போது தச்சர் பெருமாளாக காடட்சி தந்து மனிதனுக்கு பொறுமை மிகவும் அவசியம். உன்னால் இன்னும் சில நாட்கள் பொறுமையாக இருக்க முடியவில்லை. இப்போது இங்கே அரைகுறையாக இருக்கும் சிலைகளையே ஆலயத்தில் பிரதிஷ்டை செய். அது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பாடத்தை மக்களுக்கு கற்றுத் தரட்டும் என்று கூறி மறைந்தார்.
இதை அடுத்து மன்னன் கட்டிய ஆலயத்தில் இறைவனால் செதுக்கப்பட்ட பலராமர், ஜெகந்நாநாதர் சுபத்ரா ஆகிய தெய்வங்களின் சிலைகள் ஒன்றாக ஒரே கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. காலப்போக்கில் இந்த கட்டிடம் பழுதடைந்தது இதனால் கிபி 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் தற்போதைய ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.