நமது முன்னோர்களின் சாபத்தால் எதிர்பாராத வகையில் நிகழும் தவறான நிகழ்வுகளை பித்ரு தோஷம் என்கிறோம். இது குறித்து ஒரு ஐதீகம் சொல்லப்படுவதுண்டு.
அதாவது உயிர் நீத்த நம் முன்னோர்கள் பித்ரு உலகத்தை அடைகின்றனர். பித்ரு லோகத்தில் இருப்பவர்களுக்கு அதீத தாகம் மற்றும் பசி இருக்கலாம். இருப்பினும் அவர்களால் தாமாக எதையும் உண்டுவிட முடியாது காரணம் அவர்கள் தங்களின் ஸ்தூல உடலை இழந்து வெறும் ஆத்ம நிலையில் மட்டுமே இருக்கின்றனர். அவர்களுக்கென நிகழும் இறுதி சடங்கின் மூலம் வழங்கப்படுபவற்றையே அவர்களால் உணர்ந்து ஏற்று கொள்ள முடியுமாம். எனவே குழந்தைகள், குடும்பத்தினர் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்வது மிகவும் முக்கியமாகிறது. இதை சிலர் செய்ய தவறுகிற போது அவர்கள் முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
பொதுவாக பித்ரு தோஷத்தால் நிகழ்வதாக சொல்லப்படுபவை, குடும்பத்தில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் போவது, எதிர்பாரா விதமாக நிகழும் விபத்துகள், சொல்லொன உடல் உபாதைகள் அல்லது மன ரீதியான பிரச்சனைகள். முக்கியமாக மன அமைதி இல்லாமை மற்றும் கனவில் பாம்பு தோன்றுவது ஆகியவை பித்ரு தோஷத்தின் அறிகுறியாக சொல்லப்படுகின்றன. இது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
எனவே இது போன்ற பித்ரு தோஷங்களில் இருந்து விடுபட தான் முறையான இறுதி சடங்கு செய்தல், மாஹல்ய அமாவசை போன்ற முக்கிய நாட்களில் அவர்களுக்கு நன்றி சொல்லி, அவர்களை வணங்கி படையல் இடுவது வழக்கம். இருப்பினும் ஒரு சிலர் இந்த எவற்றையும் செய்ய தவறி பித்ரு தோஷத்திற்கு ஆளாகியிருப்பின் அவர்களுக்கான பரிகாரமாக சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
அதில் முதன்மையானது ஆலமரத்திற்கு நீர் வார்ப்பது. இவ்வாறு செய்வதால் பித்ரு தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்கின்றனர் மூத்தவர்கள். மற்றும் அமாவசை நாட்களில் அந்தணர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை தானம் வழங்குவது முக்கிய பரிகாரம் ஆகும். மற்றும் காகத்திற்கு உணவிடுவது முக்கிய பரிகாரமாக கருதப்படுகிறது, காரணம், மறைந்து முன்னோர்கள் காக வடிவம் எடுக்க கூடும் என்பதால் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. இன்றும் படையலிட்டவுடன் முதல் வேளையாக காகத்திற்கு உணவிடுவது வழக்கமாக இருப்பதை நாம் காணலாம். அது மட்டுமின்றி கோவில்கள் மற்றும் பிற இடங்களிலுள்ள ஏழை எளிய மக்களின் பசியாற்றுவதால் பித்ரு தோஷத்தின் தாக்கத்திலிருந்து ஒருவர் விடுபட கூடும் என்கின்றனர்.
Image : Astro Talk