மீள முடியாத கடனில் இருந்து மீண்டு வர செய்ய வேண்டிய வழிபாடும் முறைகளும்

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற ராமாயணத்தின் வரிகள் கடன் எவ்வளவு துயரத்தை தரக்கூடியது என்பதை உணர்த்தும்.அதிலிருந்து மீண்டு வர செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி காண்போம்.

Update: 2023-10-25 13:30 GMT

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகின்றன. இதில் மனிதராக பிறந்தவர்கள்தான், தான் மட்டும் நன்றாக இல்லாமல், தன்னைச் சேர்ந்த தன் குடும்பத்தினரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த ஆசையால் தங்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கி பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி பிரச்னையில் இருப்பவர்கள் எந்த வழிபாட்டு முறையை மேற்கொண்டால் கடன் பிரச்னையில் இருந்து விடுதலை பெற முடியும் என்று பார்க்கலாம்.

‘கடன் அன்பை முறிக்கும்’ என்று ஒரு பழமொழி வழக்கில் இருந்து வருகிறது. இது வியாபாரத்தில் மட்டும் அல்லாமல், அனைத்து இடங்களிலும் பொருந்தக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. யாரொருவர் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்கிறாரோ, அவரே அதிர்ஷ்டசாலி எனக் கருதப்படுகிறார். அதுபோன்ற அதிர்ஷ்டசாலிகளை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகத்தான் இக்காலத்தில் உள்ளது. சரி, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டவர்கள் அதிலிருந்து வெளியே வருவதற்கு என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.


பொதுவாக, கடன் பிரச்னையை தீர்ப்பதற்கு சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் கடன் தொகையிலிருந்து ஒரு அசல் தொகையை திருப்பி வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவிலேயே கடன் பிரச்னை தீரும். அது மட்டுமல்லாமல், சனிக்கிழமை அன்று பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் சேர்ந்து வந்தால் விரைவிலேயே கடன் சுமை தீர்ந்துவிடும் என்பது ஐதிகம்.


மேலும், சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் எந்தக் காரணத்தை கொண்டும் கடன் சம்பந்தமான எந்த விஷயங்களையும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் கடன் நம்மை மூழ்கடித்து விடும் என்பதும் நம்பிக்கை. சரி, கடன் வாங்க அவசியமான சூழ்நிலை ஏற்பட்டால், எப்பொழுது வாங்கினால் கடன் விரைவில் அடையும் என்ற கேள்வி பலருக்கும் ஏற்படும்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்கள் செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் நாளில் செவ்வாய் ஹோரையில் கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடும்பொழுது அந்தக் கடன் பிரச்னை என்பது விரைவிலேயே அடைந்து விடும். இனி, கடன் பிரச்னை தீர்வதற்குரிய வழிபாட்டைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமையன்று செவ்வாய் ஹோரையில் அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று, முருகனுக்கு செவ்வரளி பூ மாலை சாத்தி, தீபமேற்றி வழிபட வேண்டும்.


மேலும், அங்கு இருக்கக்கூடிய நவகிரகங்களில் அங்காரகனுக்கும் சிவப்பு நிற மலர்களை சாத்தி தீபமேற்றி வழிபட்டு வர வேண்டும்.இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு அங்காரகனும், அங்காரகனுக்கு அதிபதியான முருகப்பெருமானும் பரிபூரணமாக அருள்புரிந்து கடன் பிரச்னையில் இருந்து அவர்களை வெளியில் கொண்டு வருவதற்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவார்கள் என்பது நம்பிக்கை.


Similar News